

கேரள அரசின் மதுவிலக்கு கொள்கை சரியே என்று அந்த மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளத்தில் மொத்தம் 780 மதுபான பார்கள் இருந்தன. அவற்றில் 418 பார்கள் கடந்த ஆண்டில் மூடப்பட்டன. மீதமுள்ள பார்களில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. தற்போது ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மதுபானபார்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஞாயிற்றுக் கிழமை தோறும் அனைத்து மதுபான பார்களும் மூடப்பட வேண்டும் என்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி அளித் துள்ள வாக்குறுதியில், அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மதுபான பார் உரிமை யாளர்கள் சார்பில் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் கே.டி. சங்கரன், பாபு மேத்யூ பி. தாமஸ் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:
அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக மதுபான பார் உரிமை யாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அரசின் நிதி நிலையில் அக்கறை கிடையாது. மக்களின் நலன் கருதியே மதுவிலக்கு கொள் கையை கேரள அரசு அமல்படுத் தியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. அரசின் முடிவில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை.
நான்கு நட்சத்திர ஓட்டல்களில் மதுபான பார்களை நடத்த தனி நீதிபதி அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இனிமேல் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மது பான பார்கள் செயல்படும். அந்த வகையில் கேரளாவில் 24 மதுபான பார்கள் மட்டுமே இருக்கும். பீர், ஒயின் வகை பார்லர்களுக்கு தடையில்லை என்பதால் அவை வழக்கம்போல் செயல்படும்.
தீர்ப்பு குறித்து மதுபான பார் உரிமையாளர்கள் கூறியபோது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள் ளோம் என்று தெரிவித்தனர்.