

டெல்லியில் சுகாதார வசதிகளை மேம்படுத்த, தனியார் பங்களிப்புடன் கிளினிக் எனப்படும் 100 சிறிய மருத்துவமனைகள் உட்பட பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தவுள்ளார் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.
இது தொடர்பான மசோதாவை சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த வும் அவர் முடிவு செய்துள்ளார்.
புதிய மசோதாவின்படி, டெல்லியில் உள்ள அரசு மருத்துவ மனைகள் மற்றும் மருந்தகங்களின் வேலை நேரம் அதிகரிக்கப்பட உள்ளது. இவற்றில் தனியார் மருத்துவர்கள் அமர்ந்து நோயாளி களுக்கு ஆலோசனை வழங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இத்துடன், அரசு மற்றும் தனியார் பங்களிப்புகளுடன் புதிதாக 100 சிறிய அளவிலான மருத்துவமனைகள் திறக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது. இத்திட்டம் இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “புதிய கிளினிக்-களில் பணியமர்த்தப்படும் மருத்துவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் படும். இத்துடன் மருத்துவ ஆலோசனைக்காக நோயாளி களிடம் மிகக் குறைந்த அளவில் கட்டணம் வசூல் செய்யப்படும். இதனால் கிடைக்கும் தொகையை அரசும், ஆலோசனை தர அமரும் தனியார் மருத்துவர்களும் பங்கிட்டுக் கொள்வார்கள். பொதுமக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புகிறோம்” என்றனர்.
டெல்லியில் சுமார் 40 அரசு மருத்துவமனைகள் மற்றும் 300 அரசு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் டெல்லி அரசு அங்கீகாரம் பெற்ற சுமார் 1000 நர்சிங்ஹோம்களும் உள்ளன. இவற்றில் அரசு மருத்துவமனை தவிர மற்ற அனைத்தின் வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 2.30 ஆகும். இதனால், இவற்றில் பெரும்பாலானவை எந்த நோக்கத்துக்காக உருவாக்கப் பட்டதோ அதன் பயன் கிடைக்கும் வகையில் செயல்படவில்லை என புகார் கூறப்படுகிறது.
இதற்காக, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசு தனது புதிய மசோதாவில் இந்த மருத்துவ திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்த உள்ளது. இவற்றில் குறிப்பாக அதன் வேலைநேரங்கள் பொதுமக்கள் அதிக பலன் பெறும் வகையில் இரவு வரை நீட்டிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இவற்றில் பெரும்பாலான வற்றில் பிரபல தனியார் மருத்துவ மனைகளை சேர்ந்த மருத்துவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும் எனவும் கூறப்படுகிறது. இந்த மசோதாவின் திட்டங்களை அதை அறிமுகப்படுத்திய 3 மாதங்களில் செயல்படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.