மேக் இன் இந்தியாவில் அதிக பங்களிப்போர் விவசாயிகளே: ராகுல் காந்தி

மேக் இன் இந்தியாவில் அதிக பங்களிப்போர் விவசாயிகளே: ராகுல் காந்தி
Updated on
1 min read

'மேக் இன் இந்தியா' திட்டத்தில் அதிக பங்களிப்பவர்கள் விவசாயிகளே என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சண்டிகர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "விவசாயிகளும், தொழிலாளர்களுமே இந்நாட்டின் முதுகெலும்பு. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு அதிக பங்களிப்பவர்கள் விவசாயிகளே. பஞ்சாப் விவசாயிகள் போல் மேக் இன் இந்தியாவுக்கு பங்களித்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

பஞ்சாப் விவசாயிகளால் இந்தியா தானிய உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. ஏழை விவசாயிகள் இந்தியாவில் உற்பத்தி செய்வதை எல்லாம் மேக் இன் இந்தியா திட்டத்தின் பங்காக இந்த அரசு அங்கீகரிக்காதா? இல்லை பிரதமர் பார்வையில் மேக் இன் இந்தியா என்றால் முற்றிலும் மாறுபட்டதா?

மேக் இன் இந்தியா திட்டத்தின் துவக்கமே இந்திய விவசாயிகளிடமிருந்தும், தொழிலாளிகளிடமிருந்துமே ஆரம்பிக்கிறது. விவசாயிகளும், தொழிலாளர்களும் இந்த அரசங்காத்தால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

எங்கெல்லாம் விவசாய சமூகத்தினரும், தொழில் வர்க்கத்தினரும் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று அவர்களுக்காக குரல் கொடுப்பேன். பஞ்சாப் விவசாயிகளை நேற்று நேரில் சந்தித்தன் மூலம் அவர்கள் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

விவசாயிகளுக்கு தேவை நிதி உதவி மட்டுமே அல்ல. அவர்களது அனைத்துக் குறைகளையும் அரசு கவனத்தில் கொண்டு அதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஈடாக இந்த நாட்டு முன்னேற்றத்துக்கு உழைப்பவர்கள் வேறு யாருமே இல்லை" என்றார்.

வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை கோஷத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முன்னதாக, பஞ்சாப் மாநில விவசாயிகளின் நிலையை அறிந்துகொள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று அந்த மாநிலத்துக்கு ரயிலில் சென்றார்.

நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து காங்கிரஸ் போராடும். இப்போது பஞ்சாப் மாநில விவசாயிகளின் நிலையை அறிந்து கொள்வதற்காக அந்த மாநிலத்துக்குச் செல்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, ஷகீல் அகமது ஆகியோரும் ராகுலுடன் ரயிலில் பஞ்சாப் சென்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in