

சோனியா காந்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த கிரிராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய பிஹார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் விவகாரத்தில் உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யுமாறு காவல் நிலையத்துக்கு பிஹார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு பிஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தின் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் வித்யானந்த் சிங், கிரிராஜ் சிங் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை கவனத்தில் எடுத்துக் கொண்ட முசாபர்பூர் தலைமை மேஜிஸ்ட்ரேட், மனுவை சப்-டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
அதன் பின் பாஜக-வின் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யுமாறு கோர்ட் உத்தரவிட்டது.
முன்னதாக, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை யமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ராஜீவ் காந்தி நைஜீரியப் பெண்ணை திருமணம் செய்திருந்து, அப்பெண் வெள்ளை நிறத்தவராக இல்லாமலிருந்தால் காங்கிரஸ் அவரது தலைமையை ஏற்றிருக்குமா” எனக் கேள்வியெழுப்பினார்.
இது ஊடகங்களில் வெளியாகி நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.