Published : 11 Apr 2015 08:30 AM
Last Updated : 11 Apr 2015 08:30 AM

சமூக வளர்ச்சிக் குறியீட்டில் 101-வது இடம்: நேபாளத்தை விட பின்தங்கியது இந்தியா - முதலிடத்தில் நார்வே, அமெரிக்காவுக்கு 16-வது இடம்

சமூக வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 101-வது இடத்தைப் பிடித்துள்ளது. இக்குறியீட்டில் குட்டிநாடுகளான நேபாளம் மற்றும் வங்கதேசத்தை விட பின்தங்கியுள்ளது இந்தியா. நார்வே இம்முறையும் முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்காவுக்கு 16-வது இடம் கிடைத்துள்ளது.

சுகாதாரம், நீர், சுத்தம், தனிமனித பாதுகாப்பு, வாய்ப்புகளைப் பயன்படுத்துதல், சகிப்புத்தன்மை, ஒருங்கமைவு, தனிமனித சுதந்திரம் உள்ளிட்ட 52 பிரிவுகளின் அடிப்படையில் ஒரு நாட்டின் சமூக வளர்ச்சிக் குறியீடு (எஸ்பிஐ) மதிப்பிடப்படுகிறது. பொருளாதாரக் குறியீடுகளோ, அளவீடுகளோ இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீடு, பூடானின் தேசிய மகிழ்ச்சிக் குறியீடு போன்றவையும் செல்வ வளக் குறியீட்டையே கணக்கிடுகின்றன. ஆனால், அந்த மதிப்பீடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அல்லது பிற பொருளாதார அளவீடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

ஆண்டுதோறும் வெளியிடப் படும் சமூக வளர்ச்சிக் குறியீட்டில் உலக நாடுகள் பல்வேறு படி நிலைகளாக பிரிக்கப்படுகின்றன. மிக உயர்ந்த நிலை, உயர்ந்த நிலை, உயர் நடுத்தரம், கீழ் நடுத் தரம், குறைந்த, மிகக்குறைந்த, கணக்கீட்டுக்கு உட்படுத்தப்படாத நாடுகள் என 6 பிரிவுகளாக உலக நாடுகள் வகைப்படுத்தப் படுகின்றன.

மொத்தம் 133 நாடுகள் இவ்வாறு பட்டியலிடப்படுகின்றன. இதில், இந்தியா ‘குறைந்த சமூக வளர்ச்சிக் குறியீடு’ என்ற 5-வது தரநிலையில் உள்ளது.

நார்வே முதலிடம்

இப்பட்டியலில் நார்வே முதலிடத் தில் உள்ளது. ஸ்வீடன், ஸ்விட்சர் லாந்து, ஐஸ்லாந்து, நியூஸிலாந்து ஆகியவை முதல் 5 இடத்திலுள்ள மற்ற நாடுகளாகும். அமெரிக்கா 16-வது இடத்திலுள்ளது.

குட்டிநாடுகளை விட மோசம்

இந்தியாவின் அண்டை நாடு களான இலங்கை (88), நேபாளம் (98), வங்கதேசம் (100) ஆகியவை இந்தியாவை விட தரவரிசையில் முன்னுக்கு உள்ளன. மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான் 122-வது இடத்திலுள்ளது.

பிரிக் நாடுகள்

பிரிக் கூட்டமைப்பு நாடுகளில் இந்தியாதான் மிகவும் பின்தங்கி யுள்ளது. பிரேஸி்ல் 42, ரஷ்யா 71, தென்னாப்பிரிக்கா 63-, சீனா 92-வது இடத்திலும் உள்ளன.

எஸ்பிஐ செயல் இயக்குநர் மைக்கேல் கிரீன், ‘தி இந்து’ விடம் (ஆங்கிலம்) தொலைபேசியில் கூறும்போது, “சகிப்புத்தன்மை மற்றும் ஒருங்கமைவு பிரிவில் இந்தியா 128-வது இடத்திலும், உடல் நலம் மற்றும் சுகாதாரத்தில் 120-வது இடத்திலும் இந்தியா உள்ளது. இப் பிரிவுகள்தான் ஒரு நாட்டுக்கு மிகக் கடினமான துறைகள்.

நாட்டின் செல்வம் அதிகரிக்கும் போது துப்புரவு மற்றும் நீர் பிரச் சினையை எதிர்கொள்வது எளி தாகும்.

காற்று மாசுபாடு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் கடினமாகும். அமெரிக்கா சுகாதாரத் துக்காக அதிக அளவு செலவு செய்தாலும் 68-வது இடத்தில்தான் உள்ளது.

சகிப்புத்தன்மை மற்றும் ஒருங்கமைவில் இந்தியா மிக மோசமாகச் செயல்படுகிறது. பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் இது சிக்கலான பிரச்சினைதான். பொருளாதார ரீதியாக இந்தியா வளரும்போது, உடற்பருமன் பெரும் பிரச்சினையாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x