

தெலங்கானாவில் எரிவாயுக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சூர்யா பேட்டை அருகில் உள்ள இமாம் பேட்டை பகுதியில் கெய்ல் காஸ் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கை நேற்று காலை தொழிலாளர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காஸ் பைப் லைனில் உள்ள ‘பின்’ கழன்றதால், காஸ் வெளியேறியது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரமேஷ், ரோஷன் என்கிற 2 தொழிலாளர்கள் சம்பவ இடத் திலேயே இறந்தனர். மேலும் வெங்கண்ணா என்ற தொழிலாளி சூர்யாபேட்டை மருத்துவ மனையில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து இமாம்பேட்டை கோட்டாட்சியர் நிவாச ரெட்டி நேரடி விசாரணை மேற்கொண்டார். ஆனால் அவருக்கு விளக்கம் கூற காஸ் நிறுவனத்தில் நேற்று அதிகாரிகள் யாரும் இல்லை.