

நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2-வது முறையாக அவசர சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து விவசாய அமைப்புகள் தொடர்ந்த மனுவை விசா ரணைக்கு ஏற்ற உச்ச நீதி மன்றம் வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் அண்மையில் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பாரதிய கிஸான் சங்கம், கிராம சேவா சமிதி, செல்லி கிராமின் சமாஜ், சோகமா விகாரஸ் அவம் உள்ளிட்ட விவசாய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அதில், “அவசர சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது அரசியல் சாசனத்துக்கு முரணானது. சட்டம் இயற்றும் அதிகாரத்தை மத்திய அரசு கைப்பற்றப்பார்க்கிறது.
குடிமக்களின் வாழ்க்கையும் சுதந்திரமும் அவசர சட்டங் களால் ஒழுங்குமுறை படுத்தப் படக்கூடாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் அதிகாரத்தை மறைமுகமாக அத்துமீறக்கூடாது.
குறிப்பிட்ட ஒர் அவையில் அரசுக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லை என்பதற்காக அவசர சட்டத்தை உருவாக்கும் சட்டப்பிரிவு 123- பதில் அதிகாரமாக பயன்படுத்தப்படக்கூடாது. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார்.
இம்மனு, தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இம்மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். வரும் திங்கட்கிழமை இம்மனு விசாரிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.