Last Updated : 27 Apr, 2015 06:40 PM

 

Published : 27 Apr 2015 06:40 PM
Last Updated : 27 Apr 2015 06:40 PM

தேசிய நீதிபதிகள் ஆணைய தேர்வுக் குழுவில் இடம்பெற தலைமை நீதிபதி மறுப்பு

தேசிய நீதிபதிகள் ஆணைய குழு செல்லத்தக்கதா என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை, ஆணையக் குழுவில் இரண்டு சிறப்பு உறுப்பினர்களை நியமிக்கும் மூவர் தேர்வுக் குழுவில் இடம்பெற மாட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் முறைக்கு மாற்றாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, பிரதமர், மத்திய சட்டத் துறை அமைச்சர் உள்ளிட்டோரை உறுப்பினர்களாகக் கொண்ட நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (எஸ்.சி.ஏ.ஓ.ஆர்.ஏ), இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது.

“நீதிபதி ஏ.ஆர்.தவே, நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்; எனவே, இந்த வழக்கை அவர் விசாரிப்பது முறையாக இருக்காது' என்று எஸ்.சி.ஏ.ஓ.ஆர்.ஏ சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலி நாரிமன் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையிலிருந்து ஏ.ஆர்.தவே விலகினார். பின்னர், நீதிபதி நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இம்மனு நீதிபதி கேஹர் தலைமையில் செலமேஸ்வர், மதன் பி லோகுர், குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி, “இந்த வழக்கில் இறுதி முடிவை உச்ச நீதிமன்றம் எடுக்கும் வரை நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பங்கேற்கப்போவதில்லை என பிரதமருக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கடிதம் எழுதியுள்ளார்” என அரசியல் சாசன அமர்வு முன்பு தெரிவித்தார்.

இத்தேர்வுக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம்பெறுவர். இவர்கள்தான் ஆறு நபர் குழுவில் இடம்பெறும் இரு சிறப்பு உறுப்பினர்களைத் தேர்வு செய்வர். இந்நிலையில் இந்த தேர்வுக் குழுவில் தற்போது இடம்பெற மாட்டேன் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சில உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், இந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்பது குறித்து, மூத்த வழக்கறிஞர்கள் ராம் ஜெத்மலானி, ஹரியாணா அரசு சார்பில் தேசிய ஆணையத்துக்கு ஆதரவாக ஆஜரான ஹரீஷ் சால்வே உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கருத்து கேட்டனர்.

அவர்களின் கருத்தைக் கேட்ட பிறகு, நீதிபதிகளின் அறைக்குச் சென்ற அவர்கள் 15 நிமிடத்துக்குப் பிறகு மீண்டும் நீதிமன்ற நடவடிக்கையைத் தொடங்கினர்.

அப்போது, நீதிபதி கேஹர் கூறும்போது, “வழக்கின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நடத்துவது என்றும், தேவைப்பட்டால் இடைக்கால உத்தரவை நீதிமன்றம் வழங்கும் என்றும்” ஒருமித்த மனதுடன் முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, தேர்வுக்குழுவில் தலைமை நீதிபதி இடம்பெறுவது கட்டாயம் என அட்டர்னி ஜெனரல் வலியுறுத்தினார். அக்குழுவில் இடம்பெறுவது குறித்து தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் எனவும வலியுறுத்தினார். சில நீதிபதிகளை முந்தைய கொலீஜியம் முறையின் பரிந்துரைகளை ஏற்று நியமிக்கலாம் எனத் தெரிவித்தார்.

ஆனால், மூத்த வழக்கறிஞர் பாலி எஸ் நரிமன் கூறும்போது, “தேர்வுக்குழு கூட்டத்தில் தலைமை நீதிபதி பங்கேற்காத நிலையில், வேறு நபரை பங்கேற்கும்படி அரசியல் சாசன அமர்வு உத்தரவிடலாம்” எனத் தெரிவித்தார்.

”தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு தடை விதிக்கவோ, ஒப்புதல் அளிக்கவோ எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அந்த ஆணையம் செயல்படலாம்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x