

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்திய அரசு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இதற்காக இந்தியாவுக்கு நேபாளம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
+91 11 2301 2113, +91 11 2301 4104 மற்றும் +91 11 2301 7905, ஆகிய எண்களில் இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
"நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனைத்து உதவிகளையும், ஆதரவுகளையும் தர இந்தியா தயாராக உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் நேபாளத்துடன் இந்தியா துணை நிற்கும்" என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான நேபாளத் தூதர் தீப் குமார் உபாத்யாய், தன்னுடைய நாட்டுக்கு நடமாடும் மருத்துவ வசதி தேவை என்று கோரியிருக்கிறார்.
மேலும் அவர் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடியுடனும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். எங்களின் அதிபர் அவர்களுடன் தொடர்பில் உள்ளார். அவர்கள் எங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்கள். நேபாளத்தின் சார்பாக நான் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
4 விமானங்கள் விரைவு
இதனிடையே நேபாளத்தில் மீட்புப் பணிகளுக்காக நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட சி17 குளோப்மாஸ்டர், சி130 ஹெர்குலிஸ் உள்ளிட்ட 4 விமானங்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டன. 40 உறுப்பினர்கள் அடங்கிய மீட்புக்குழுவும் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் மட்டுமல்லாமல் நேபாள மக்களையும் மீட்கும் பணியில் ஈடுபடும். இவர்கள் சேதம் பற்றியும் மதிப்பிடுவார்கள். மேலும் சிறப்புபொறியாளர்கள் குழுவையும் விமானத்தில் இந்தியா இன்று அனுப்புகிறது. நேபாளத்தின் கோரிக்கையை ஏற்று மருத்துவக் குழுக்கள், நடமாடும் மருத்துவமனைகளும் அனுப்பிவைக்கப்படும் என்று நிருபர்களிடம் வெளியுறவுத்துறைசெயலர் எஸ்.ஜெய்சங்கர் நிருபர்களிடம் தெரிவித்தார். நிவாரணப்பொருட்களில் கம்பளங்கள், கூடாரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.