Last Updated : 17 Apr, 2015 10:13 AM

 

Published : 17 Apr 2015 10:13 AM
Last Updated : 17 Apr 2015 10:13 AM

இ-பைக்குகளை தயாரிக்கும் முயற்சியில் ஹார்லி டேவிட்சன்

அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமான ஹார்லி டேவிட்சனின் மோட்டார் சைக்கிள்கள் பைக் பிரியர்களின் கனவு வாகனமாக உள்ளது. நூற்றாண்டுக்கும் மேலாக சூப்பர் பைக்குகளை தயாரித்து வரும் ஹார்லி டேவிட்சன், காலம் சுழலுவதையும் கவனிக்கத் தவறவில்லை. முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடிய இ-பைக்குகளை தயாரிப்பதற்கான முன்னோட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

வாகனங்களை கெளரவத்தின் இயந்திர வடிவமாக மனிதன் ஆக்கிக்கொண்ட 20-ம் நூற்றாண் டின் தொடக்கத்தில்தான் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் துவங்கப் பட்டது. அமெரிக்காவின் ஹார்லி மற்றும் ஆர்தர் டேவிட்சன், வால்டர் டேவிட்சன் ஆகியோரின் எண்ணத்தில் முதன் முதலில் சைக்கிளாக சந்தைக்கு வந்த ஹார்லி டேவிட்சன் அடுத்த ஒரே ஆண்டில் மோட்டார் சைக்கிள் களைத் தயாரிக்க ஆரம்பித்தது.

405 சிசி திறன் கொண்ட 13 கிலோ சூப்பர் பைக்குகள்தான் ஹார்லி டேவிட்சனின் முதல் மோட்டார் சைக்கிளாகும். தனது அடுத்தடுத்த தயாரிப்புகளில் வண்டியின் எடையையும் திறனையும் கூட்டிக் கொண்டே போனது அந்நிறுவனம். பல பணக்கார அமெரிக்கர்களும், ராணுவம் மற்றும் காவல்துறையினரும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை விரும்பி வாங்கினார்கள். முதல் உலகப்போரின் போது சுமார் 15 ஆயிரம் பைக்குகளை ராணுவம் வாங்கியது.

எச்-டி என்று செல்லமாக அழைக் கப்பட்ட ஹார்லி டேவிட்சன் 28 ஆயிரத்து 189 பைக்குகளை தயாரித்து உலகிலேயே அதிக பைக்குகளை தயாரித்த நிறுவனம் என்ற பெருமையை 1920-ம் ஆண்டில் பெற்றது. அப்போதே 67 நாடுகளில் ஹார்லிக்கு டீலர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து பல சாதனைகளை கடந்து வந்த ஹார்லி டேவிட்சனுக்கு ஊழியர்கள் வழியே பிரச்சினை வந்தது.

60-களின் நடந்த வேலைநிறுத்தம் ஹார்லி டேவிட்சனின் தரத்தை குறைத்ததோடு, விலையையும் அதிகரிக்க வைத்ததாக கூறப் படுகிறது. இதற்கிடையே ஜப்பானிய நிறுவனங்களின் அசுர வளர்ச்சி ஹார்லியின் வேகத்துக்குத் தடை போட்டன. இதையுணர்ந்த அமெரிக்கா 1983-ம் ஆண்டில் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற பைக்குகளுக்கான வரியை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சியாக எலக்ட்ரிக் சூப்பர் பைக்குகளை தயாரிப்பதற்கான முன்னோட்ட பணிகளில் ஹார்லி டேவிட்சன் ஈடுபட்டு வருகிறது.

இதன்படி முன்னோட்டத் துக்காக மட்டுமே 1000 பைக்குகளை தயாரித்துள்ள அந்த நிறுவனம் புராஜெக்ட் லைவ் வையர் என பெயரிட்டு அவற்றை சோதனை பயணத்துக்கு ஆட்படுத்த தயாராகி வருகிறது. பல சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்க கணக்கு போட்டே இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

இந்த பைக்குகளை 3.30 மணி நேரம் சார்ஜ் செய்தால் 90 கிமீ வரை பயணிக்க முடியும். பைக்கை ஸ்டார்ட் செய்த 4-வது நொடியில் 100 கிமீ வேகத்துக்கு பிக்அப் கிடைக்கும். இந்த வண்டிகளை எக்கானமி, ஸ்போர்ட்ஸ் என இரண்டு மோடுகளில் இயக்க முடியும். இந்த வண்டியில் அதிகபட்சமாக 148 கிமீ வேகத்தில் செல்ல முடியுமாம்.

இதன் சோதனை ஓட்டமான லைவ் வையர் வெற்றி பெறுவதை பொறுத்து வண்டியில் பல்வேறு மாற்றங்களுடன் இந்தியா உட்பட உலகெங்கும் இதனை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹார்லி டேவிட்சன் குழுமம்.

இந்த நிறுவனத்தின் தமிழக டீலராக கோரமண்டல் ஹார்லி டேவிட்சன் இயங்கி வருகிறது. அதன் பகுதி மேலாளர் ஆதித்யா கூறியதாவது:

ஹார்லி டேவிட்சன் இந்தி யாவில் தனது செயல்பாடுகளை 2009-ம் ஆண்டு ஆரம்பித்தது. ஹரியாணா மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ஹார்லி டேவிட்சன் இந்தியா, புதுடெல்லி, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்க ளூரு, கொச்சி என நாட்டின் முக்கிய நகரங்களில் டீலர்களை கொண்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் மட்டும் தான் டீலராக உள்ளோம்.

லைவ் வையர் என்பது எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரிப்பதற்கான முன்னோட்டம். இது பொதுமக்கள் மற்றும் ஹார்லி டேவிட்சன் வாடிக்கையாளர்களின் ஒப்புதலின் பேரில் இந்த பைக்கு களை தயாரிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்ய நிறுவனத்தின் தலைமை திட்டம் வைத்துள்ளது.

தமிழகத்தில் மாதத்துக்கு குறைந்தது 10 முதல் 15 வண்டிகள் விற்பனையாகின்றன. இதில் சமீபத்திய வரவான ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 வண்டிகள் பலரால் விரும்பி வாங்கப்படுகிறது. ஏனென்றால், அதன் விலை ரூ 5.1 லட்சம்தான்.

ஹார்லி டேவிட்சன் என்றாலே அதிக விலை கொடுக்க வேண்டும் என்று தயங்கிய பலர் 5 லட்சத்தில் 750 சிசி வண்டியை ஓட்ட முடியும் என்ற நிலை வந்ததால், இப்போது இதனை விரும்பி வாங்குகிறார்கள்.

இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்டர், டயனா, சாஃப்டயில், என அனைத்து மாடல்களும் எங்களிடம் உள்ளன. ஷோரூமில் உள்ள இருப்பை பொறுத்து முன்பதிவு செய்வதற்கேற்ப பைக்குகளை டெலிவரி செய்து வருகிறோம். சுலபத் தவணை முறையும் எங்களிடம் உள்ளது.

ஹார்லி டேவிட்சனை பொறுத்தவரை அதை சூப்பர் பைக் என்றோ, ஸ்போர்ட்ஸ் பைக் என்றோ அழைப்பதைவிட நெடுந்தூர பயணத்துக்கான பைக் என்றே ஹார்லியை கருத வேண்டும் என்றார் ஆதித்யா.

manikankan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x