Published : 30 Apr 2015 10:57 AM
Last Updated : 30 Apr 2015 10:57 AM
சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவுக்குப் போயிருந்தேன். மலிவு விலையில் கிடைக்கும் ஆங்கிலப் புத்தகக் கடையில் ஒரு தாத்தாவும் பாட்டியும் முண்டியடித்துக் கொண்டு, பை நிறையப் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
இவ்வளவு புத்தகங்களை இவர்கள் எப்போது படிக்கப் போகிறார்கள் என ஆச்சர்யமாக இருந்தது. அந்தத் தாத்தாவிடம் கேட்டபோது சிரித்தபடியே சொன்னார்:
‘‘ஊரில் இருந்து பேரன், பேத்திகள் வரப் போகிறார்கள். கோடை முழுவதும் வாசிக்க புத்தகம் வேண்டும் இல்லையா? அதற்காகதான் வாங்குகிறோம்’’ என்றார் தாத்தா.
‘‘எங்கிருந்து வருகிறார்கள்..?’’ எனக் கேட்டேன்.
‘‘மகன் ராஞ்சியில். மகள் டெல்லியில் இருக்கிறாள். ஒவ்வோர் ஆண்டும் கோடைவிடுமுறை முழுவதும் பேரன், பேத்திகள் எங்களோடு இருப்பார்கள். இந்த ஒரு மாத காலம் எங்கள் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியானது. நாள் போவதே தெரியாது. பேரன், பேத்திகளுக்காக நான் புத்தகம் படித்துக் காட்டுவேன். கதைகள் சொல்வேன். படிப்பதில் அவர்களுக்குள் போட்டி வரும். என் பேத்திதான் படிப்பில் கில்லாடி. அவள் ஒரு மாதத்துக்குள்: 45 புத்தகங்களைப் படித்துவிடுவாள்’’ என்றார் பாட்டி.
‘‘விடுமுறையிலும் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களா?’’ எனக் கேட்டேன்.
‘‘அதற்காகத்தான் கதை, கவிதை, வரலாறு, சுயசரிதை, பயணக் கட்டுரை என விதவிதமாக வாங்கியிருக்கிறேன். விளையாட்டு, பேச்சு, சினிமா போல புத்தகங்களும் கோடையில் தவிர்க்க முடியாதவை. ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் ஊருக்குப் போனதும், அவர்கள் படித்த புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்துக்கொள்வோம்.
பிறகு ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் படித்துக் கொண்டிருப்போம். இப்போது வீட்டில் பெரிய நூலகமே சேர்ந்துவிட்டது. பேரன், பேத்திகள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுடன் நூலகமும் வளர்ந்து நிற்கிறது. இந்த ஒரு மாத காலத்துக்காக ஒரு வருஷம் காத்துக்கிடப்பது சந்தோஷமாகத்தான் இருக்கிறது’’ என்றபோது தாத்தாவின் முகம் பளபளத்தது.
கோடை விடுமுறை என்பது உறவு களை இணைக்கும் பாலம் என்பதை பலரும் மறந்து போய்விட்ட இன்றைய சூழலில் பேரன், பேத்திக்காக புத்தகங்களைத் தேடி வாங்கும் இந்தத் தாத்தாவும் பாட்டியும் அபூர்வமான மனிதர்களாகவே தோன்றினார்கள்!
எனக்கு இந்தப் பாட்டியைப் பார்த்தபோது ‘அனிதா தேசாய்’ எழுதிய ‘மலைமீது நெருப்பு’ (Fire on the Mountain) நாவல்தான் நினைவுக்கு வந்தது. அதுவும் ஒரு பாட்டியின் கதைதான். நந்தா கவுல்’ என்ற தனிமையில் வாழும் வயதான ஒரு பெண்தான் நாவலின் மையப் பாத்திரம். ‘தனது பேத்தியின் வருகையை பாட்டி எப்படி எதிர்கொள்கிறார்’ என்பதையே நாவல் விவரிக்கிறது.
‘அனிதா தேசாய்’ ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர். இவரது ‘மலைமேல் நெருப்பு’ நாவல் 1998-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்றுள்ளது. இந்த நாவலை அசோகமித்திரன் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சாகித்ய அகாடமி இந்த நூலை வெளியிட்டுள்ளது.
மூன்று முறை புக்கர் பரிசுக்கான இறுதி பட்டியலில் இடம் பெற்ற அனிதா தேசாய், அந்த விருதைப் பெறவில்லை. ஆனால், அவரது மகள் கிரண் தேசாய் தனது இரண்டாவது நாவலான ‘தி இன்ஹெரிடென்ஸ் ஆஃப் லாஸ்’ (The Inheritance of Loss) நூலுக்கு புக்கர் பரிசை வென்றுவிட்டார்.
டேராடூன் மலைப் பகுதியில் தனிமை யில் வாழ்ந்து வருகிறார் ‘நந்தா கவுல்’. இவரது கணவர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். தனது கணவரின் இறப்புக்குப் பிறகு தனிமையை நாடி மலைப்பிரதேசம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார். சமைப்பது மற்றும் வீட்டு வேலைக்கு ராம்லால் என்ற ஒரு வேலைக்காரர் உடனிருக்கிறார்.
சூரிய வெளிச்சத்தில் ஒளிரும் மலை யின் அழகை ரசித்தபடியும், பறவைகளின் சங்கீதத்தை கேட்டபடியும், இதமான காற்றில் மனதை பறிகொடுத்தபடி தன் கடந்த காலத்தின் சோகத்தை மறந்து, தனிமையில் வாழ்ந்து வருகிறார் நந்தா கவுல். தபால்காரர் ஒருவர்தான் வெளி உலகோடு அவருக்குள்ள ஒரே உறவு.
ஒருநாள் நந்தாவின் பேத்தி ராக்கா விடுமுறைக்காக அவரது வீட்டுக்கு வரப் போவதாக கடிதம் வருகிறது. முதியவர்கள் தனிமையில் எளிய வாழ்க்கை வாழ்பவர்கள். விருந்தினர்களின் வருகை அந்த வாழ்க்கைக்கு இடையூ றாகவே இருக்கும். அத்துடன் பேத்திக்காக விதவிதமாக சமைத்து விருந்தளிக்கவும், உபசரிக்கவும் வேண்டும் என சலித்துக் கொள்கிறார் நந்தா கவுல். ஆனால், வரப் போகிறவள் சொந்தப் பேத்தி. சில நாட்கள் மட்டுமே தங்கப் போகிறாள் என்பதால் அவளை ஏற்றுக்கொள்கிறார்.
ஐஏஎஸ் அதிகாரியின் மகளான ராக்கா, தனது பெற்றோர்கள் ஓயாமல் சண்டை யிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்ப தால், எங்காவது நிம்மதியான இடத்தில் போய் சில நாட்கள் இருக்கலாம் எனப் பாட்டியைத் தேடி வருகிறாள்.
எங்கே ராக்கா வந்தவுடன் தனது அன்றாட வாழ்க்கை நிலைகுலைந்து போய்விடுமோ என பாட்டி பயப்படுகிறார். ஆனால், ராக்கா அவள் நினைத்ததைவிட அமைதியான பெண்ணாகவே இருக் கிறாள். தன்னைப் போலவே அவளும் தனிமை விரும்பியாக இருப்பதைக் கண்டு பாட்டி ஆச்சர்யம் அடைகிறாள்.
பாட்டிக்கும் பேத்திக்குமான உரையாடல், ஒன்றாக சேர்ந்து நடப்பது, மலையை வேடிக்கை பார்ப்பது , வீட்டுப் பணிகளைச் சேர்ந்து செய்வது என அற்புதமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
ராக்காவின் மூலம் தனது இளமைக் காலத்தை நினைவுகொள்கிறார் நந்தா. இந்தச் சிறிய வயதிலேயே ராக்கா எவ் வளவு பண்போடும், சுயகட்டுப்பாடோடும் வளர்ந்திருக்கிறாள் என வியக்கிறார்.
ஒருநாள் நந்தாவின் தோழி இலாதாஸ் அவரைப் பார்க்க வீடு தேடி வருகிறார். சமூக சேவகியான இலாவோடு பேசிக் கொண்டிருக்கும்போது, தனது கடந்த கால நினைவுகளில் சஞ்சரிக்கிறார் நந்தா. அப்போது, அவரது கணவர் தன் மேல் அக்கறையின்றி நடந்து கொண்டது, வேறொரு பெண்ணுடன் தொடர்புகொண் டிருந்தது போன்ற விவரங்கள் வெளிப் படுகின்றன. அர்ப்பணிப்பு மிக்க மனைவியாக வாழ்ந்த போதும், புறக்கணிப்பும் வேதனையும் மட்டுமே தனக்கு மிஞ்சியதை உணர்கிறார். மீதமிருக்கும் வாழ்க்கை தனது விருப்பப்படி அமைய அவள் தனிமையை நாடி கரிக்னானோவுக்கு வந்ததை நினைத்துக் கொள்கிறார்.
நாவலின் இறுதியில் பாட்டியும் பேத்தி யும் ஒருவரையொருவர் புரிந்துகொள் கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். இயற்கை அவர்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்துகிறது. நாவலின் முடிவில் நந்தாவை பார்த்துவிட்டுத் திரும்பிச் செல்லும் வழியில் இலாதாஸ் எதிர்பாராமல் தாக்கப்பட்டு இறந்து போகிறார். இலாதாஸை அடையாளம் காட்ட நந்தா அழைக்கப்படுவதுடன் நாவல் நிறைவுபெறுகிறது.
நந்தா கவுல், ராக்கா, இலா மூவரும் மாறுபட்ட வாழ்க்கையின் பிரதிநிதிகள். வேறு வேறு காலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இவர்கள் ஒன்று போலவே கசப்பான நினைவுகளைக் கொண்டிருக்கிறார்கள். குடும்பம் ஏற் படுத்திய சுமையால் அவதிப்படுகிறார் கள். அடையாளங்களை இழக்கிறார்கள். அதிலிருந்து விலக தனிமையை நாடுகிறார்கள்.
அனிதா தேசாயின் கவித்துவமான விவரணைகளும், துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடும், நுட்பமான கதை சொல்லும் முறையும் நாவலை மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாக மாற்றுகிறது.
இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப்பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com