

தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்படும் வேத பாடசாலையில் பயின்ற நவீன் நாயக் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கோயில் அர்ச்சகராகத் திகழ தயார் நிலையில் உள்ளதாக அந்த வேதபாட சாலை கூறியுள்ளது.
தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள நரசப்பூர் தாண்டா பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனச் சிறுவன் நவீன் நாயக் ஆவார்.
பர்திபூர் ஆஸ்ரமத்தில் உள்ள ஸ்ரீ தத்தாகிரி மஹராஜ் வேத பாடசாலையில் பயிலும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒரே மாணவர் நவீன் நாயக்.
இந்த பாடசாலையில் சமயம் சார்ந்த சடங்கு சம்பிரதாயங்கள் உட்பட ஜோதிடம் மற்றும் பிற பூஜை முறைகளை கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதில் பயின்ற நவீன் நாயக், 13 வயதிலேயே மந்திரங்களை உச்சரிப்பதிலும், துல்லியமாக அதனை முழுதும் சொல்வதிலும் அசாதாரண திறமை கொண்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நவீன் நாயக், இன்னும் சில ஆண்டுகளில் சமய-சடங்குகளை நடத்தி வைக்கும் அளவுக்கு சிறந்த ஒரு புரோகிதராகவும் உருவாகவிருப்பதாக அந்த வேத பாடசாலை தெரிவித்துள்ளது.