Published : 10 Apr 2015 02:49 PM
Last Updated : 10 Apr 2015 02:49 PM

20 தமிழக தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யுங்கள்: ஆந்திர அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடந்த என்கவுன்ட்டர் குறித்து ஆந்திர அரசு சார்பில் 16 பக்க விளக்க அறிக்கை அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யும்படி உத்தரவிட்டது.

கடந்த 7-ம் தேதி காலை திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் சந்திரகிரி மண்டலம் வாரி மெட்டு என்கிற இடத்தில் சச்சிநோடு பண்டா மற்றும் ஈத்தல குண்டா ஆகிய இரண்டு இடங்களில் 20 தமிழக தொழிலாளர்கள், ஆந்திர சிறப்பு அதிரடி போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களது உடல்கள் திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டன.

திருப்பதி பஸ்ஸில் சென்று கொண்டிருந்த தமிழக தொழிலா ளர்கள் 7 பேரை ஆந்திர போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றுவிட்டனர் என பஸ்ஸில் இருந்து தப்பி வந்த சேகர் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் உடல்களில் தீக்காயங்களும் வெட்டுக் காயங்களும் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. இது தவிர என்கவுன்ட்டரில் இறந்தவர்கள் மிக அருகில் அதாவது 5 மீட்டர் முதல் 10 மீட்டர் தொலைவில் இருந்து சுடப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும், என்கவுன்ட்டரில் ஈடுபட்ட போலீஸாருக்கு எவ்வித காயங்கள் இல்லாததும் பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இதுவரை இல்லாத வகையில் 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதை தமிழக அரசு உட்பட அனைத்து கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடுமை யாக கண்டித்து உள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து ஆந்திர முதல்வரிடம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள தமிழக அரசு, இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. மத்திய மனித உரிமை ஆணையம், ஆந்திர உயர் நீதிமன்றம் ஆகியவை விளக்கம் கேட்டு ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆந்திர மாநில போலீஸ் டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்றுமுன்தினம் வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி, உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா, போலீஸ் டிஜிபி ராமுடு, தலைமைச் செயலர் கிருஷ்ணாராவ் மற்றும் உயர்நிலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆந்திர அரசு சார்பில் 16 பக்க விளக்க அறிக்கையும் சேஷாசலம் வனப்பகுதியில் 6-ம் தேதி செம்மர கடத்தல் நடைபெற்றதற்கு ஆதாரமாக வீடியோ பதிவுகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஆந்திர மாநில அரசு சார்பில் போலீஸ் டிஜிபி ராமுடு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராயினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: இந்த என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டவர்கள் குறித்த விவரங்களை தெரியப்படுத்தி உள்ளீர்களே தவிர, இதில் பங்கேற்ற போலீஸாரின் விவரங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த அறிக்கை முற்றிலும் என்கவுன்ட் டரில் உயிரிழந்தவர்களுக்கு எதிராக உள்ளது. இதற்கு யார் விசாரணை அதிகாரியாக நியமிக் கப்பட்டுள்ளார் என்கிற விவரமும் இல்லை. இந்த அறிக்கை அதிருப்திகரமாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்கு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.

‘போலீஸாரே என்கவுன்ட்டர் செய்து, அவர்களே இந்த வழக்கை விசாரணை நடத்தினால் எப்படி? இந்த வழக்கை ஏன் அசாதாரணமான வழக்காக பதிவு செய்யவில்லை? என்கவுன்ட்டரில் பங்கேற்ற போலீஸார் மீது ஏன் இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யவில்லை’ என அரசு தரப்பு வழக்கறிஞரை பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த வழக்கை இந்திய தண்டனை சட்டம் 302-ன்படி கொலை வழக்காக பதிவு செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசார ணையை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x