Published : 03 Apr 2015 08:53 AM
Last Updated : 03 Apr 2015 08:53 AM

ஐஏஎஸ் அதிகாரி பயிற்சி மையத்தில் தங்கிய போலி பெண் அதிகாரி பிடிபட்டார்

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் ஒன்றில் போலி ஐஏஎஸ் அதிகாரி அடையாள அட்டையுடன் பெண் ஒருவர் சட்ட விரோதமாக தங்கியிருந்தது அம்பலமாகி உள்ளது. இந்நிலையில் இந்த மையத்தின் துணை இயக்குநர் தனக்கு வேலை தருவதாகக் கூறி தன்னிடம் லஞ்சம் வாங்கியதாக அந்தப் பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் முசவுரியில் லால் பகதூர் தேசிய நிர்வாக பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு நிறுவன மான இது, பொது கொள்கை மற்றும் பொது நிர்வாகம் குறித்த பயிற்சி வழங்குவதுடன் ஆராய்ச்சி பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

எல்பிஎஸ்என்ஏஏ மையத்தில் சட்டவிரோதமாக தங்கியதாக ரூபி சவுத்ரி என்ற பெண் மீது, அந்த மையத்தின் நிர்வாக அதிகாரி (பாதுகாவல்) கடந்த 31-ம் கேகி முசவுரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுத்ரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

டெல்லி விஞ்ஞான் பவனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எல்பிஎஸ்என்ஏஏ மையத்தின் துணை இயக்குநர் சவுரப் ஜெயினை சந்தித்தேன். அப்போது, நூலகத்தில் விரைவில் காலியாக உள்ள ஒரு பதவியில் என்னை நியமிப்பதாக உறுதி அளித்தார். இதற்காக ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டார். முன்பணமாக ரூ.5 லட்சம் கொடுத்தேன்.

நைனிடாலில் உள்ள நிர்வாக பயிற்சி மையதின் போலி அடையாள அட்டை ஒன்றை ஜெயின் எனக்கு வழங்கினார். அதில் துணை ஆட்சியர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அட்டையின் நம்பகத்தன்மை குறித்து கேட்டபோது, அட்டையை வைத்துக்கொள் கேள்வி கேட்காதே என்றார்.

அதன் பிறகு வேலைக்கான எனது விண்ணப்பத்தின் நிலவரத்தை அறிவதற்காக அவ்வப்போது மையத்துக்கு சென்று வந்தேன். அப்போது தேவைப்பட்டால் அந்த மையத்தின் பாதுகாவல் பணியில் ஈடுபட்டுள்ள தேவ் சிங்கின் வீட்டில் தங்குவேன். மேலும் எனது சில பொருட்களை தற்காலிகமாக அங்கு வைத்திருந்தேன். இதற்காக மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வாடகை செலுத்தி வந்தேன்.

கடந்த மார்ச் 18-ம் தேதி போலி அடையாள அட்டை விவகாரம் வெளியில் தெரிந்துவிட்டது. இதையடுத்து, நான் தங்கியிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் 31-ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த மையத்தில் உள்ள யாருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை எனில், அறைக்கு சீல் வைத்த பிறகு என்னை வெளியில் செல்ல எப்படி அனுமதித்தார்கள்? அதன் பிறகு 4 நாட்கள் கழித்து எப்ஐஆர் பதிவு செய்தது ஏன்?

என் மீது எப்ஐஆர் பதிவு செய்த பிறகு, தனது பெயரை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் இதற்காக ரூ.5 கோடி தருகிறேன் என்றும் ஜெயின் என்னிடம் தெரிவித்தார். நான் வேலை வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்தது தவறுதான். அதேநேரம் இதில் நான் மட்டுமே குற்றவாளி அல்ல. இதில் தொடர்புடைய அனைவரிடமும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு சவுத்ரி தெரிவித் துள்ளார்.

சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

எல்பிஎஸ்என்ஏஏ மையத்தில் போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த ரூபி சவுத்ரி மீதான வழக்கை விசாரிக்க, உத்தராகண்ட் அரசு பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று உத்தராகண்ட் காவல் துறை தலைவர் (டிஜிபி) பி.எஸ்.சித்து தெரிவித்துள்ளார்.

இந்த மையத்துக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வந்திருந்தபோது எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில் தானும் இருப்பதாக சவுத்ரி கூறியிருக்கிறார். பாதுகாப்பு வளையத்தை மீறி அந்தப் பெண் அதில் இடம்பெற்றது எப்படி என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x