

ஊழல் உள்ளிட்ட குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மேல் முறையீடு செய்தால், பதவி இழப்பில் இருந்து தப்பலாம் என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(4)-ஐ உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனால், ரஷீத் மசூத், லாலு பிரசாத் யாதவ், ஜெகதீஷ் சர்மா, செல்வகணபதி என்று அடுத்தடுத்து நான்கு எம்பி-க்கள் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்கு வித் திட்டவர் 86 வயது மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ்.
இந்தியாவில் எல்.எல்.எம். சட்டப்படிப்பு முடித்த முதல் பெண் பட்டதாரியான லில்லி தாமஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள் ளார். இவரது 50 ஆண்டுகால சட்டத் துறை பணியில் பொது நலனுக்காக ஏராள மான வழக்குகளை தொடர்ந்துள்ளார். தள்ளாத வயதிலும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். அவர், ‘தி இந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
ஊழல்வாதிகள், குற்றம் புரிந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இடம் பெறக் கூடாது என்பதற்காக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றீர்கள். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 1,398 பேர், அதாவது 17 சதவீதம் வேட் பாளர்கள் குற்றப் பின்னணியுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதே?
இந்தப் பட்டியலில் அர்விந்த் கெஜ்ரிவால் பெயர் கூட இருக்கிறது. அதாவது, ஒருவர் மீது வழக்கு இருந்தால் அவர் குற்றப் பின்னணி உடையவர். அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற நிலையை நாம் எடுக்க முடியாது. வழக்கின் தன்மை என்ன, அவர் முதல்முறை குற்றவாளியா, என்ன மாதிரியான குற்றத்தைப் புரிந்துள்ளார், அரசியல் உள்நோக்கத்துடன் தேர்தல் நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதா போன்ற விஷயங்களை ஆராய வேண்டும். ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு அதை நீதிமன்றம் வழக்காக ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவரை குற்றம்சாட்டப்பட்டவராக பார்க்க வேண்டும். சில நேரங்களில் நல்ல வேட்பாளராக இருந்தால் அவர் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் மக்கள் அதை அறிந்த நிலையில் அவரை போட்டியிட அனுமதிக்கலாம்.
தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 631 பேர் மட்டுமே பெண்கள். இது மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கையில் 8% மட்டுமே. இதுபற்றி உங்கள் கருத்து?
தகுதியுடைய பெண்கள் போட்டி யிட முன்வராமல் இருந்திருக்கலாம். பெண்கள் தங்களை தேர்தல் உள்ளிட்ட அனைத்து போட்டிகளுக்கும் தகுதியுடை யவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
உங்கள் பார்வையில் தற்போதைய தேர்தல் எப்படி இருக்கிறது?
அரசு சார்பில் தேர்தலுக்கு ரூ.5,000 கோடி செலவழிப்பதாக கூறப்படு கிறது. வேட்பாளர்கள் சார்பிலும் பணம் செலவழிக்கப்படுகிறது. அதில் மக் களுக்கு கிடைக்கும் பலன் என்ன என்று பார்த்தால் எதுவும் இல்லை. இப்போது நடப்பது தேர்தலே அல்ல. இதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இந்தத் தேர்தலில் ஜனநாயகம் இருப்பதாகத் தெரிய வில்லை. தேர்தலில் வெற்றி பெற்று வரு பவர்கள் மரியாதைக்குரியவர்களாக, மக் களின் உண்மையான பிரதிநிதிகளாக, மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் களாக இருக்க வேண்டும். அப்படி எதுவும் தற்போதுள்ள ஜனநாயகத்தில் இல்லை என்பதால் தேர்தலுக்கு அர்த்தம் இல்லை.
எந்த மாதிரியான மாற்றம் தேவை என்று கருதுகிறீர்கள்?
எம்.எல்.ஏ. - எம்.பி. போன்ற மக்கள் பிரதிநிதிகளை மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும். அவர்களுக்கு "மக்கள் பிரதிநிதி" என்ற பெயர்தான் உள்ளது. அதற் குரிய அதிகாரம் இல்லை. அவர்களை உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக மாற்ற வேண்டும். தற்போது மாவட்ட ஆட்சியர் களிடம்தான் அதிகாரம் உள்ளது. அதை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்து, மக்களின் தேவைகளை நேரடியாக நிறை வேற்றித் தருபவராக எம்எல்ஏ - எம்பி-க்கள் இருக்க வேண்டும். அவர்களிடம் மட்டுமே மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அதிகாரி களை எதற்காகவும் சந்திக்கக் கூடாது.
இத்தகைய மாற்றம் நடைமுறையில் சாத்தியமா?
நிச்சயம் சாத்தியமானதுதான். இதற்காக வேறு எந்த பெரிய மாற்றங்களையும் கொண்டுவர வேண்டியதில்லை. இதற்கு தேவையான அதிகாரம் நம் அரசியல் சாசன அமைப்பிலேயே உள்ளது. அதைக் குறிப்பிட்டு நாம் உத்தரவுகளைப் பெற்றால் போதும். மக்கள் பிரதிநிதிகளை உண்மையில் அதிகாரம் படைத்த வர்களாகவும் மக்களுக்கு சட்டப்பூர்வமாக கடமைப்பட்டவர்களாகவும் மாற்ற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். அதில் வெற்றியும் பெறுவேன்.
நீதித் துறையின் தற்போதைய நிலை பற்றி?
நீதித் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஒரு வழக்கை தொடர்ந்து வெற்றிபெற, வழக்கு தொடர்பவர் தங் களையே விற்க வேண்டியுள்ளது. இது நல்லதல்ல. நீதிமன்றங்களின் அதிகமான வழக்குதாரர்கள் அரசாங்கம்தான். இதுவே, நம் ஜனநாயகத்தின் தோல்விக்கு அடையாளம். நீதித் துறையும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்ட அமைப்பாக இல்லை. நீதித் துறை, மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என ஒவ்வொருவரும் மக் களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.