

கடந்த 1970-ம் ஆண்டு தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பிரிவு) ஆளுகையில் கர்நாடக மத்திய பேராயம் தொடங்கப்பட்டது. பெங்களூரு, மைசூரு, மாண்டியா, கோலார் உள்ளிட்ட கர்நாடக மாவட்டங் களும், தமிழத்தில் கிருஷ்ணகிரியும் இதன் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இந்த பேராயத்தின் முதல் பேராயராக நார்மன் சி.சார்ஜன்ட் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து கென்னத் இ.கில், சி.டி.ஜத்னா, எஸ்.வசந்த்குமார் ஆகியோர் பேராயராக பதவி வகித்துள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு பேராயர் எஸ்.வசந்த்குமாரின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 13-ம் தேதி அடுத்த பேராயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. 184 தேவாலயப் பிரதிநிதிகள் வாக்களித்த இத்தேர்தலில் தமிழரான பிரசன்ன குமார் சாமுவேல் வெற்றி பெற்றார்.
இதை ஏற்க மறுத்த கன்னட அமைப்புகள் பிரசன்ன குமார் பேராயராக பதவியேற்க விடாமல் தடுத்தனர். கர்நாடகத்தில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்தான் பேராயராக இருக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். ஒரு கட்டத்தில் அவரை தாக்க முயன்று, பெங்களூருவில் உள்ள சி.எஸ்.ஐ. திருச்சபையின் தலைமை அலுவகத்துக்கும் பூட்டுப் போட்டனர்.
மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் தனர். இதை விசாரித்த நீதி மன்றம், “சி.எஸ்.ஐ. திருச்சபை விதிமுறைகளின்படி பிரசன்ன குமார் சாமுவேலின் வெற்றி செல்லும்” என கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து கர்நாடக மத்திய பேராயத்தின் 5-வது பேராயராக தமிழரான சாமுவேலுக்கு தலைமை பேராயர் கோவடா தெய்வா சீர்வாதம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனால் கர்நாடக தமிழர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், பெங்களூரு மாநகர இணை ஆணையர் ஹரிசேகரன் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேராயர் பிரசன்ன குமார் சாமுவேல், ‘தி இந்து'விடம் கூறியதாவது:
எனது தாய்மொழி தமிழாக இருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் பிறந்து வளர்ந்தேன். சி.எஸ்.ஐ. திருச்சபையில் 35 ஆண்டுகள் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளேன். எனது நிய மனத்தை விரும்பாத சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால், நீதி வென்றிருக்கிறது. யார் மீதும் எனக்கு எந்த வருத்தமும் கோபமும் இல்லை. அனைவரையும் அரவணைத்து, அன்பின் பாதையில் பயணிக்கவே விரும்புகிறேன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல தேவாலயங்களில் பிரசன்ன குமார் சாமுவேலின் பெயரை குறிப்பிடுவதையும் தவிர்த்துள்ள தாகக் கூறப்படுகிறது.