காங்கிரஸில் இணைந்தார் நந்தன் நிலகேணி

காங்கிரஸில் இணைந்தார் நந்தன் நிலகேணி
Updated on
1 min read

ஆதார் அட்டை திட்டத்தின் இயக்குநரும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நந்தன் நிலகேணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

பெங்களூரில் உள்ள கர்நாடக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு வந்த நந்தன் நிலகேணி, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரிடம் அளித்தார். அவரிடம் கட்சிக் கொடியை ஜி.பரமேஸ்வர் அளித்தார்.

காங்கிரஸில் இணைந்த பின்பு செய்தியாளர்களிடம் நிலகேணி கூறும்போது, "பெங்களூரின் டெல்லி பிரதிநிதியாக பலம்வாய்ந்த தலைவர் தேவை. அதை பூர்த்தி செய்யவே தேர்தலில் போட்டியிட உள்ளேன்.

அரசியலோ, வியாபாரமோ எந்தவொரு துறையாக இருந்தாலும், அதில் வலிமையாக கோலோச்சியவர்கள் ஒரு கட்டத்தில் வெளியேறித்தான் ஆக வேண்டும். தெற்கு பெங்களூரைப் பொறுத்தவரை அதற்கான நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்" என்றார்.

காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டிருந்த மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலில், தெற்கு பெங்களூர் தொகுதி நந்தன் நிலகேணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நந்தன் நிலகேணி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தகவல் தொழில்நுட்ப துறை இந்தியாவில் அறிமுகமான போது, நந்தன் நிலகேணி இன்போசிஸ் நிறுவனத்தில் இணை நிறுவனராக இருந்தார். அந்த துறையில் திறம்பட செயல்பட்டதால் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராகவும் உயர்ந்தார்.

பெங்களூரை சேர்ந்த இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்திய தனி அடையாள எண் (ஆதார் அட்டைத் திட்டம்) ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்திய தனி அடையாள எண் ஆணையத்தின் தலைவராக இருந்த போது ஆதார் அட்டை வழங்குவதற்காக நந்தன் நிலகேணி நாடு முழுவதும் பயணித்தார். கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களோடு மிக நெருக்கமாக பழகியதால் அரசியல் ஆர்வம் ஏற்பட்டது.

இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் பெங்களூர் வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை செய்தார்.மேலும் காங்கிரஸ் சார்பாக வருகின்ற‌ மக்களவைத் தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் களமிறங்கவும் விருப்பமும் தெரிவித்தார்

காங்கிரஸில் இணைந்த நந்தன் நிலகேணி வருகின்ற மக்களவை தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க பொதுச்செயலாளர் அனந்தகுமாரை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். அனந்தகுமார் இதே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in