

மக்களவையில் நேற்று பேசிய கேரள மாநில காங்கிரஸ் உறுப்பினர் கே.சுரேஷ், “தமிழகம் உட்பட நாட்டின் பல இடங்களில் தலித் மக்களுக்கு எதிராக கொடுமைகளும், வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் ஒரு பள்ளியில் தலித் மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்யக் கூறியுள்ளனர்” என்றார்.
இதையடுத்து அதிமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். “காங்கிரஸ் உறுப்பினர் தமிழ்நாடு, தமிழ்நாடு என்று அழுத்தமாக கூறுவது ஏன்” என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
அப்போது சுரேஷுக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து சுரேஷ் பேசியுள்ளார். அவரை பேச அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து, எந்த ஒரு மாநிலத்தையும் குறிப்பிடாமல் பேச வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறினார்.
ஆனால் சுரேஷ் அதனை கண்டுகொள்ளவில்லை. இதற்கு அதிமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.