

ஹரியாணா மாநிலம் குர்கானில் காருக்குள் செல்போனை ஒளித்து வைத்து, திருட்டுப்போன தனது காரை கண்டுபிடித்ததுடன், திருடனை காவல்துறையினர் கைது செய்யவும் உதவி செய்துள்ளார் அதன் உரிமையாளர்.
குர்கானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். அந்தக் காரில் ரூ.900 மதிப்புள்ள செல்போன் ஒன்றை ‘சைலன்ட் மோடில்’ ஒளித்து வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த செல்போனை மூன்று நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்து, அதனைத் தொடர்ந்து இயக்கத்திலேயே வைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவரது கார் திருட்டுப்போனது. இதையறிந்த அவர் உடனடியாக குர்கான் சதார் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு, தனது கார் திருடப்பட்டதையும், அக்காருக்குள் செல்போன் ஒன்றை மறைத்து வைத்திருப்பதையும் கூறினார்.
உடனடியாக செயல்பட்ட காவல்துறையினர் அந்த செல்போன் எண் இருக்கும் பகுதியைக் கண்டறிந்து, திருட்டுப் போன காரை மீட்டதுடன், ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற திருடனையும் கைது செய்தனர். கார் திருட்டுப்போன சிலமணிநேரத்திலேயே மீண்டும் கண்டறிவதற்கு, அக்கார் உரிமையாளரின் முன்யோசனையான செயல்பாடு மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது.
இதேவழிமுறையை மற்றவர்களும் பின்பற்றலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.