

மும்பையில் இயக்கப்படும் மோனோ ரயில் நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் பரிதவித்தனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் கிரேன் மூலம் மீட்கப்பட்டனர்.
நாட்டில் முதல்முறையாக மும்பையில் கடந்த 2014 பிப்ரவரி 2-ம் தேதி மோனோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. மும்பை போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க இந்த ரயில் சேவையை பயணிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று வடாலாவில் இருந்து செம்பூருக்கு மோனோ ரயில் புறப்பட்டது. பக்தி பார்க் ரயில் நிலையம் அருகில் வந்தபோது நடுவழியில் ரயில் நின்றுவிட்டது. இதனால் பயணிகள் செய்வதறியாது பரிதவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயரமான கிரேன் இயந்திரம் மூலம் ரயிலின் இரண்டு டிரைவர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவ பகுதிக்கு மும்பை வடகிழக்கு தொகுதி எம்.பி. கிரித் சோமையா வந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினார்.
இதுகுறித்து மோனோ ரயில் நிலைய மூத்த அதிகாரிகள் கூறியபோது, “மின் விநியோக கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் நின்றுவிட்டது, ஐந்து மணி நேரத்துக்குப் பிறகே ரயில் சேவை சீரானது” என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.