

தங்களது நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் அரசியல் கட்சிகளை தண்டிப்பதில் மக்கள் ஈவு இரக்கம் காட்டுவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ கருத்து கூறியுள்ளது.
இதுகுறித்து சனிக்கிழமை சிபிஐயின் மத்திய செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
16-வது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை சிபிஐ ஏற்றுக்கொள்கிறது. ஈடு இணையற்ற பண பலம், மோசடிகளுக்கு இடையில் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் கொள்கைகள் கோட்பாடுகள் அடிப்படையில் போட்டியிட்டன.
இதில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஊழல், விலைவாசி உயர்வு, வேலை யின்மை ஆகிய பிரச்சினை களை நம் கட்சி முன்னிறுத் தியது. நமது ஜனநாயகக் குடி யரசுக்கும் சமுதாயத்தின் மதச்சார்பின்மைக்கும் மத வாத சக்திகளால் இருக்கும் ஆபத்தையும் கட்சி முன்வைத்தது.
இருப்பினும் தேர்தல் முடிவுகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரி இயக்கத்துக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை கட்சியின் தேசியக் குழு மேற்கொள்ளும். தங்களது நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் கட்சிகளை தண்டிப்பதில் மக்கள் ஈவிரக்கம் காட்டுவதில்லை.
காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சிக்கு எதிராக மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி யதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. வேறு மாற்று இல்லாத நிலையில் பாஜக இதை சாதக மாக்கிக்கொண்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனநாயகம், மக்களின், தேசத்தின் உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.