Published : 02 May 2014 03:26 PM
Last Updated : 02 May 2014 03:26 PM

இளம்பெண்ணை வேவுபார்த்த விவகாரம்: 16-க்கு முன்பு விசாரணை நீதிபதி நியமனம் - மத்திய அமைச்சர் சுஷில்குமார் தகவல்

இளம்பெண் வேவு பார்ப்பு விவ காரம் தொடர்பான விசாரணை கமிஷனுக்கு தலைமையேற்க மே 16-க்கு முன்பாக நீதிபதி நியமிக்கப்படுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

2009-ம் ஆண்டில் குஜராத்தின் அப்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின்பேரில் பெண் இன்ஜினீயர் ஒருவரை மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை போலீஸார் உளவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட் புலனாய்வு இணையதளம் அண்மையில் செய்தி வெளியிட்டது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின்பேரிலேயே இளம்பெண் வேவு பார்க்கப் பட்டதாக அந்த இணையதளம் சுட்டிக் காட்டியிருந்தது.

இந்த வேவுபார்ப்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. ஆனால் கமிஷனுக்கு தலைமை ஏற்க நீதிபதி நியமிக்கப் படவில்லை.

ஷிண்டே உறுதி

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சிம்லாவில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இளம்பெண் வேவு பார்ப்பு விவகாரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு வெகுநாள்களுக்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதால் நீதிபதியை நியமிக்க தேர்தல் நடத்தை விதிகள் தடையாக இருக்காது. வாக்கு எண் ணிக்கை நாளான மே 16ம் தேதிக்கு முன்னதாக விசா ரணை கமிஷனுக்கு நீதிபதி நியமிக்கப்படுவார் என்றார்.

கபில் சிபல் கருத்து

மோடிக்கு எதிரான விசாரணை கமிஷனுக்கு தலைமை ஏற்க நீதிபதிகள் தயங்குவதாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய சட்டஅமைச்சர் கபில் சிபல் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

இளம்பெண் வேவுபார்ப்பு விவ காரம் குறித்து பாஜக தலைவர்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டுவிட்டால் மோடி தப்புவது கடினம். விசா ரணை கமிஷனுக்கு தலைமை ஏற்க நீதிபதிகள் தயங்குவதாக கூறுவது அபத்தமானது என்றார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியபோது, ஆட்சி பறிபோகும் ஆதங்கத்தில் மத்திய அமைச்சர்கள் இவ்வாறு பேசுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x