

பிஹார் முதல்வராக நிதிஷ் குமாரே நீடிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக தனது முடிவை அறிவிக்க நிதிஷ் குமார் ஒருநாள் அவகாசம் கோரியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே ஆளும் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவையும் அமைச்சரவை ராஜினாமாவையும் ஆளுநர் டி.ஒய்.பாட்டீல் ஏற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐக்கிய ஐனதா தளத்தின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் நாகேந்திர சிங் கொண்டு வந்த தீர்மானத்தில் நிதிஷ்குமாரே முதல்வராக நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக ஆதரவு அளித்தனர்.
ஆனால் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை நிதிஷ் குமார் ஏற்கவில்லை.
இதுகுறித்து நிதிஷ் குமாரின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
பிஹார் முதல்வராக நிதிஷ்குமாரே நீடிக்கவேண்டும். இல்லையெனில் அவரது வீட்டின் முன்பு தர்ணா இருப்போம் என்று எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். தனது முடிவை அறிவிக்க நிதிஷ் குமார் ஒருநாள் அவகாசம் கோரியுள்ளார். திங்கள்கிழமை (இன்று) மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸிடம் ஆதரவு கோரிய சரத் யாதவ்
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் பிஹார் மாநில காங்கிரஸ் தலைவர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினார்.