

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஏ.சி. இயந்திர அறையில் நேற்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முற்றிலும் எரிந்து சேதமானது.
நாடாளுமன்ற முக்கிய கட்டிடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் ஏ.சி. இயந்திர அறை உள்ளது. 8-ம் எண் நுழைவாயில் அருகே வரவேற்பு பகுதிக்கு வலது பக்கத்தில் உள்ள இந்த அறையின் கூரை பிளாஸ்டிக் ஷீட்களால் ஆனது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு மாதத்துக்கு தள்ளி வைக்கப் பட்டது. இதையடுத்து நாடாளு மன்ற வளாகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி நேற்று ஏ.சி. இயந்திர அறையில் வெல்டிங் பணி நடைபெற்றது. அப்போது வெல்டிங் தீப்பொறி மூலம் தீப்பற்றியுள்ளது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் புகை மண்டலம் உருவானது.
10 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். தீ விபத்தில் ஏ.சி. இயந்திர அறை முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து டெல்லி தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி ஏ.கே.சர்மா கூறும்போது, “பராமரிப்பு பணியின்போது பாதுகாப்பு விதிகளை மீறி அஜாக்கிரதை யாக பணியாற்றியதே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.
தீ விபத்தால் 88 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்தின் முக்கிய கட்டிடத்துக்கு சேதம் ஏதுமில்லை. தீ விபத்து குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.