

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி அக்பர் சாலையில் உள்ள விசாலமான பங்களாவுக்கு வெள்ளிக்கிழமை குடி பெயர்ந்தார்.
உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 10 மாதங்களுக்குப் பிறகு, எண் 17, அக்பர் சாலையில் உள்ள இந்த பங்களாவுக்கு ராஜ்நாத் குடிபெயர்ந்துள்ளார்.
இந்த பங்களா அவருக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டாலும் இதில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் சிரஞ்சீவி கடந்த ஜனவரியில்தான் இதை காலி செய்தார். இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு ராஜ்நாத் குடி பெயர்ந்துள்ளார்.கடந்த 19 ஆண்டுகளாக எண் 38, அசோகா சாலையில் உள்ள பங்களாவில் ராஜ்நாத் வசித்து வந்தார்.
ராஜ்நாத் சிங் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்து வரும் நிலையில் புதிய பங்களாவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 பரந்த புல்வெளிகள், தனி அலுவலகம், பார்வையாளர்களை சந்திக்கும் இடம், பாதுகாப்பு படையினர் தங்கும் வசதி என விசாலமாக இந்த பங்களா அமைந்துள்ளது.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் இந்த பங்களாவுக்கு அருகில் வசிக்கின்றனர்.