

டெல்லியில் ஓடும் பஸ்ஸில் இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளியின் பேட்டியை ஒலி, ஒளிபரப்ப தடை விதித்து டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்கிறது.
இதுதொடர்பாக டெல்லி மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் டெல்லி போலீ ஸார் நேற்று முன்தினம் இரவு ஒரு மனு தாக்கல் செய்தனர். பெண்களை தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் குற்ற வாளியின் பேட்டி அமைந்துள்ளது. இதை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட அனுமதித்தால், பலாத் கார சம்பவம் நிகழ்ந்தபோது ஏற்பட்டதுபோல பொதுமக்கள் போராட்டத்தில் குதிப்பதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்து.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பணியிலிருந்த நீதிபதி புனீத் பவா, குற்றவாளியின் பேட்டியை ஊடகங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த மனு மாஜிஸ்திரேட் சஞ்சய் கனக்வால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான விசாரணை அதிகாரி, குற்றவாளியின் பேட்டியை வெளியிட நீதிபதி புனீத் பவா தடை விதித்தது குறித்து தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கனக்வால், முகேஷ் சிங்கின் பேட்டியை மறு உத்தரவு வரும் வரை ஒலி, ஒளிபரப்பு செய்யவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடரும் என உத்தரவிட்டார்.