

ஓர் ஆணின் கண்ணோட்டத்தில் பெண்ணை சித்தரித்துள்ள 'இந்தியாவின் மகள்' ஆவணப்படம் சரியானதே என பிரிட்டன் திரைப்படத் தயாரிப்பாளர் லெஸ்லி உட்வின் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 16, 2012-ல் ஓடும் பேருந்தில் 23 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த படத் தயாரிப்பாளரும் ‘பாப்டா’ விருது பெற்றவருமான லெஸ்லி உட்வின் பிபிசியுடன் இணைந்து ஆவணப்படமாக தயாரித்துள்ளார்.
டெல்லி பாலியல் சம்பவம் தொடர்பாக பிரிட்டன் படத் தயாரிப்பாளர் லெஸ்லி உட்வின் எடுத்த ஆவணப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இவ்வழக்கின் குற்றவாளி ஒருவர் திஹார் சிறைக்குள்ளிருந்து அளித்த பேட்டி தொடர்பாக, சிறையினர் இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்துள்ள உட்வின், "ஓர் ஆணின் கண்ணோட்டத்தில் பெண்ணை சித்தரித்துள்ள 'இந்தியாவின் மகள்' ஆவணப்படம் சரியானதே.
முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்கும் முன்னர் திகார் சிறை இயர்க்குநர் ஜெனரலுக்கு அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தேன். 2013-ல் எழுதிய அக்கடிதத்தில், பிரச்சாரத்தான ஆவணப்படம் தயாரிக்க இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். இரண்டு வாரங்களிலேயே எனக்கு அனுமதி கிடைத்தது. உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அதிகாரபூர்வ அனுமதியும் பெற்றேன்.
சிறை உத்தரவில் உரிய கையெழுத்தும் இருந்தது. இந்தியாவின் மகள், டிசம்பர் 2012 பாலியல் பலாத்காரத்தின் கோரத்தை எடுத்துரைப்பதே. அதில் வெறும் பரபரப்பு பேட்டி மட்டுமே இருந்திருந்தால் அதை எப்போதோ புறந்தள்ளியிருப்போம். ஆனால் அது முழுக்க முழுக்க ஒரு பிரச்சாரத்துக்கான கருத்தடக்கத்தைக் கொண்டது.
பொதுநலன் கருதி எடுக்கப்பட்டது. ஆவணப்படத்தை எடுப்பதற்கு முன்னர் முகேஷ் உட்பட குற்றவாளிகள் ஐவரின் பெற்றோரையும் சந்தித்தோம். முகேஷின் தாயாரிடம் பேசினோம். அவரால்தான், முகேஷ் எங்களுக்கு பேட்டியளித்தார்" என்றார்.
இருப்பினும் ஒரு குற்றவாளியை ஏன் பேட்டி எடுத்து அவருக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உட்வின், "பச்சாதாபத்தின் விளைவு. இந்திய ஊடகங்கள் அந்த குற்றவாளிகளின் மனோபாவத்தையும் பதிந்திருக்க வேண்டும். மாற்றம் ஏற்படும் வரை இத்தகைய பேட்டிகளை தொடர்ந்து எடுப்பது அவசியம். இந்த ஆவணப்படம் பாலின பாகுபாட்டை பதிவு செய்துள்ளது. ஓர் ஆணின் பார்வையில் பெண்ணைச் சித்தரித்துள்ளது" என்றார் அவர்.