Last Updated : 21 Mar, 2015 08:48 AM

 

Published : 21 Mar 2015 08:48 AM
Last Updated : 21 Mar 2015 08:48 AM

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-7: 20 சதவீத தள்ளுபடி அளித்த நீதிபதி குன்ஹா

கடந்த 1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.66.65 கோடி. இதே காலகட்டத்தில் நால்வருக்கும் சொந்தமான 19 கட்டிடங் களின் மொத்த மதிப்பு ரூ.28.17 கோடி. இதில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்கார்டனில் 2 வீடுகள், ஹைதராபாத் ஜே.டி.மெட்லா பண்ணை வீடு ஆகிய 3 கட்டிடங்களின் மதிப்பு மட்டும் ரூ.13.64 கோடி என்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் கேஸ் டைரி புத்தகம்.

இது தொடர்பாக அரசு தரப்பில், ‘போயஸ்கார்டன் வீட்டின் உள்பகுதியில் 35 எம்.எம். 2 புரொஜெக்டர்கள் கொண்ட மினி தியேட்டர் உட்பட ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு வசதியான அறைகள் கட்டப்பட்டுள்ளன. 125 கிலோ வாட், 62.5 கிலோவாட் அளவுள்ள 2 ஜெனரேட்டர்களும்,1.5டன் முதல் 2.5 டன் எடையுள்ள 39 குளிர்சாதனங்களும் இருந்தன.

போயஸ்கார்டன் வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் மிகப்பெரும் சிற்ப கலைஞர்கள் செதுக்கப்பட்ட விலை யுயர்ந்த அலங்கார ம‌ர சிற்பங்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட 21 மரப் பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி. இதே போல 118 எலக்ட்ரானிக் பொருட்களின் மதிப்பு ரூ 1.5 கோடி. இது தவிர 10 கிரவுண்ட் 330 சதுர அடி தரையிலும், அதன் சுவரிலும் விதவிதமான மார்பிள், விலை உயர்ந்த கிரானைட்,தேக்குமரம் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடங்களின் கட்டுமான மதிப்பு ரூ.13.64 கோடி என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஆதாரங்கள், சாட்சியங்க‌ளுடன் நிரூபித் துள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஜெயலலிதா தரப்பு வழக் கறிஞர் பி.குமார், ‘‘கிரானைட், மார்பிள், தேக்கு, மர சிற்பங்கள் ஆகியவற்றின் விலையை 100 மடங்கு வரை அதிகமாக மதிப்பிட்டுள்ளனர். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சந்தையில் கேட்டு அறியப் பட்டதாக கூறும் பொருட்களின் மதிப்பு 1991-96 வரையிலான விலைதான் என்பதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லை. க‌ட்டிடங்களை கட்டிய பொறி யாளர்களையோ, வடிவமைப்பாளர் களையோ குறுக்கு விசாரணை செய்ய வில்லை. இதில் இருந்து விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மற்றும் அப்போதைய திமுக அரசின் அழுத்தத்தின் காரணமாக கட்டுமானத்தின் மதிப்பீடு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது தெரியவருகிறது.

எனவே அரசு தரப்பின் கட்டுமான மதிப்பீட்டை தள்ளுபடி செய்து, வருமானவரி தீர்ப்பாயத்தின் முடிவை கருத்தில் கொள்ள வேண்டும்'' என பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வாதிட்டார்.

20 சதவீத தள்ளுபடி

இதற்கு நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், ‘‘ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடங்களை மதிப்பீடு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை மட்டும் பொதுப்பணித் துறையின் விலைப் பட்டியல்படி க‌ணக்கிட்டுள்ளனர்.பொதுப்பணித் துறையிடம் விலைப்பட்டியல் இல்லாத கிரானைட், மார்பிள்,தேக்கு போன்ற பொருட்களை 1999-ம் ஆண்டு சந்தை விலைப்படி கணக்கிட்டுள்ளது தெரிய வருகிறது.ஆனால் அந்த விலை தான் உண்மையான விலை என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ச‌மர்ப்பிக்கவில்லை.

கட்டிட மதிப்பீட்டை பொறுத்தவரை அரசுத் தரப்பு மற்றும் குற்றவாளிகள் தரப்பு இரண்டிலும் நிறைய குறைபாடுகள் இருக்கிறது.எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பொதுப்பணித்துறை பொறியாளர்களைக் கொண்டு மதிப்பீடு செய்த மதிப்பில் 20 சதவீதத்தை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது'' என தெரிவித்துள்ளார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு மேல்முறையீட்டில், ‘‘ஜெயலலிதாவின் கட்டிடங்களை மதிப்பீடு செய்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் அடங்கிய‌ வல்லுநர் குழு அப்போதைய திமுக அரசால் நியமிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவின் கண் காணிப்பின் கீழ் செயல்பட்ட அந்த குழு சுதந்திரமாக செயல்படவில்லை.அந்த குழுவுக்கு ‘ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிடும் குழு' என வெளிப்படையாக பெயரிடப்பட்டதில் இருந்தே,அவர்கள் திமுக அரசுக்கு சாதகமாக நடந்துக்கொண்டது பற்றி அறிந்துகொள்ள முடியும்.

கட்டுமான மதிப்பீடு குறித்து ம‌திப்பீட்டு குழுவில் இடம்பெற்ற அரசு தரப்பு சாட்சிகள் வேலாயுதம், திருத்துவராஜ், ஜெயபால் ஆகியோரிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அப்போது அவர்கள், ‘பொதுப்பணித்துறை விலைப்பட்டியல் இல்லாத அலங்காரப் பொருள்கள், கிரானைட், மார்பிள், எலக்ட் ரானிக் பொருட்கள் பற்றி சென்னை கோயம் பேட்டில் நூறு அடி சாலையில் உள்ள ஒரு கடையில் விலை விசாரித்தோம்.

அங்கு பெறப்பட்ட விலை நிலவரம் குறித்த ரசீதுகளை சாலையிலே கிழித்துப் போட்டுவிட்டோம்'' என தெரிவித்துள் ளனர். கட்டுமான மதிப்பீட்டை உண்மை யான ஆதாரத்துடன் நிரூபிக்க உதவும் ரசீதுகளை கிழித்து போட்டது ஏன்?

இதே போல குற்றவாளிகள் தரப்பு சாட்சி மும்பையை சேர்ந்த மார்பிள் மாடசாமி அளித்துள்ள சாட்சியத்தில், ‘‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை புதுப்பிக்க ஒரு சதுர அடி மார்பிள் ரூ.90-க்கு விற்றேன். அதனை மும்பையில் இருந்து சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் என நிறுவன செலவிலே லாரி மூலம் அனுப்பினேன்'' என உரிய ஆவணத்துடன் தெளிவாக கூறியுள்ளார். ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மார்பிள் விலையை மலை அளவுக்கு உயர்த்தி கணக்கிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துகளை மிகைப்படுத்திக் காட்டி குற்றவாளியாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மதிப்பீடு செய்துள்ளது. இதில் அப்போதைய ஆளும் கட்சியின் அழுத்தம் வெளிப்படை யாகவே தெரிகிறது. இந்திய சாட்சிய சட்டப்படி, வழக்கு விசாரணையின் போது சுதந்திரமாக செயல்படாத அதிகாரிகளின் சாட்சியங்களை சாட்சிய மாக ஏற்கக்கூடாது. எனவே இந்த மதிப்பீட்டு குழு சமர்ப்பித்த அனைத்து விலைப்பட்டியலையும் ஏற்க கூடாது''என வாதிடப்பட்டது.

மேலும் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு, ‘‘பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் மதிப்பீடு தவறானது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அரசு தரப்பு சாட்சியங்களை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. மாறாக அந்த மதிப்பீட்டில் 20% தள்ளுபடி செய்வதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எவ்வித ஆதாரமும், ஆவணமும், சாட்சியமும் இல்லாமல் நீதிபதி குன்ஹா தானாக ஒரு முடிவுக்கு வந்துள்ளார். சட்டவிதிகளை மீறி ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை எப்படி நீதிபதியால் முடிவுக்கு வர முடிந்தது. நீதிபதி குன்ஹாவின் 20 சதவீத தள்ளுபடி கணக்கு ஒரு புதிய‌ வழக்கை ஆரம்பிக்கும் வகையில் இருக்கிறது''என வாதிடப்பட்டது.

சற்றுநேரம் யோசித்துக்கொண்டிருந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி,''இது குற்றவியல் வழக்கு. வருமான வரி வழக்கல்ல. வருமான வரித்துறை தீர்ப்பாயம் பற்றி பேசிக்கொண்டிருப்பது உங்களுக்கு உதவாது. நீங்கள் பேசுவதை எல்லாம் குறிப்பெடுக்க நான் ஆடிட்டர் அல்ல. இதுவரை நீங்கள் 20 சதவீத ஆதாரத்தைக்கூட என்னிடம் கொடுக்க வில்லையே?'' என்றார்.

ஜெயலலிதா தரப்பு மவுனமாக இருந்ததால், ‘‘உங்களிடமாவது ஆதாரம் இருக்கிறதா?''என அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிடம் கேட்டார். அதற்கு,‘‘வழக்கின் முடிவில் அதனை தாக்கல் செய்கிறேன்''என்றார். ஆனால் இறுதிவாதத்தின் போது கட்டுமான மதிப்பீடு குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

- மேலும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x