

ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்எல்ஏ ஒருவரின் மகன் பியூன் வேலைக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்றுவிட்டு அழைப்புக்காகக் காத்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம், டாங்க் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹீரா லால் வர்மா. இவரது மகன் ஹன்ஸ்ராஜ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநில வேளாண்மை மார்க்கெட்டிங் வாரியத்தில் காலியாக உள்ள பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஆஜ்மீர் நகரில் இந்த வேலைக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்றார்.
2-வது முறையாக எம்எல்ஏவாக இருக்கும் ஹீரா லால் வர்மா, அரசியலில் நுழைவதற்கு முன் மாநில அரசு அதிகாரியாக இருந்தவர்.
இவர் தனது மகன் குறைவாக படித்திருப்பதால் இதுபோன்ற பணிக்கு மட்டுமே தகுதியானவர், தகுதி மற்றும் திறமையை மீறி அவர் அரசியலில் நுழையவோ அல்லது வேறு பணிகளை செய்யவோ தான் விரும்பவில்லை என்கிறார்.
இதுபற்றி எம்எல்ஏ ஹீரா லால் கூறும்போது, “எனது மகன் ஹன்ஸ்ராஜ் தனியார் க்ளினிக் ஒன்றில் மாதம் 5 ஆயிரம் சம்பளத்துக்கு பணியாற்றி வருகிறார். படிப்பில் மந்தமான அவர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. எனவே அவருக்கு இதைவிட வேறு வாய்ப்புகள் இல்லை. தகுதி மற்றும் திறமைக்கு மீறிய பணிகளில் அல்லது தொழிலில் ஈடுபடுமாறு அவனை நான் ஊக்குவிக்கவில்லை” என்றார்.
பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கும் ஹன்ஸ்ராஜின் முடிவு குறித்து ஹீரா லாலிடம் சக எம்எல்ஏக்கள் கேட்டுள்ளனர். இதற்கு ஹீரா லால், “இது வழக்கத்துக்கு மாறான ஒன்றுதான். ஆனால் இது பாவச் செயலோ, குற்றச் செயலோ இல்லை. பகட்டாக வாழ்வதற்கு நியாமற்ற செயல்களை செய்யும்படி எனது குழந்தைகளை நான் ஊக்கவிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
ஹீரா லால் வர்மா 3 பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். ஒரு பாடத்தில் தங்கப் பதக்கமும் பெற்ற இவர், சமூக நலத்துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார்.
“அரசுப் பணியில் சேருவதன் மூலம் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாறிவிடுகிறது. எனது மகன் ஹன்ஸ்ராஜால் படிப்பை தொடர முடியவில்லை. எனவே இதுபோன்ற பணியே அவனுக்குப் பொருத்தமானது. தகுதியின் அடிப்படையில் அவன் இந்தப் பணியை பெறும் வாய்ப்புள்ளது” என்கிறார்.
ஹீரா லாலின் மூத்த மகன் முன்னாள் கவுன்சிலர், தற்போது தொழில் செய்து வருகிறார். மற்றொரு மகன் சமீபகாலத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, போட்டித் தேர்வுகளுக்கான தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறார். வர்மாவின் மகள் பி.எட். படித்து வருகிறார்.