Published : 07 Mar 2015 12:30 pm

Updated : 07 Mar 2015 12:32 pm

 

Published : 07 Mar 2015 12:30 PM
Last Updated : 07 Mar 2015 12:32 PM

தலையணைகளின் கலைநயம்

வாழ்வை இனிமையாக்குபவை சின்னச் சின்ன விஷயங்கள்தான். சுகமாகத் தலை சாய்த்துப் படுத்துறங்கலாம் எனப் படுக்கை அறைக்குள் நுழைந்தால் தலையணை கல்லாக இருந்தால் அசவுகர்யமாக இருக்குமல்லவா? ஆனால் ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்) நாம் வசித்திருந்தால் கல்லின் மீது நிம்மதியாகப் படுத்து உறங்கியிருப்போம். ஏனெனில் அப்போது தலையணைகள் கல்லால் ஆனவைதான்.

உலகின் முதல் தலையணை

உலகின் முதல் தலையணையின் காலம் கி.மு. 7000. பிறைச்சந்திரன் வடிவில் குடையப்பட்ட கல்தான் அன்று தலையணையாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் சுகமாகத் தலை சாய்த்து உறங்க வேண்டும் என்பதற்காக அல்ல. வாய், மூக்கு, காதுகளுக்குள் பூச்சி புகாமல் இருக்கவே உடலைத் தரையில் கிடத்தினாலும் தலைப் பகுதியை மட்டும் சற்றே உயர்வான கல்லில் வைத்து உறங்கினார்கள் அன்றைய மனிதர்கள். இதே போல பழங்கால எகிப்தியர்கள் மற்றும் சீனர்களும் குடையப்பட்ட கல் மற்றும் மரம் மீது தலை சாய்த்து உறங்கினார்கள்.

ஆபரணக் கல் கொண்டு தலையணை

உடலின் மகுடம் தலை. அது உடலின் ஒரு பகுதி என்பதைவிடவும் ஞானத்தின் பிறப்பிடம் மற்றும் ஆன்மிகத்தோடு நேரடி தொடர்புடையது என நம்பிய எகிப்தியர்கள் தலையைக் காக்கும் சாதனமாகக் கருதி மரம் மற்றும் கல்லால் செய்யப்பட்ட தலையணையைப் பயன்படுத்தினார்கள். ஆனால் அன்று செல்வந்தர்கள் மட்டுமே தலையணை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.

சீனர்களின் தலையணைகள் வேலைப்பாடு மிகுந்தவை. சுயி சாம்ராஜ்யம் (581-618) மற்றும் தாங் சாம்ராஜ்யத்தின்போது (618-907) மூங்கில், மரம், கல் மட்டுமின்றிப் பீங்கான், வெண்கலம், பச்சை மாணிக்கக் கல் என ஆபரணங்களுக்காகப் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டும் தலையணைகள் செய்யப்பட்டன. மிருதுவான பொருள்களைக் கொண்டு தலையணை செய்ய முடியும் என அப்போதே அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் மென்மையான தலையணைகளில் தலை வைத்துத் தூங்கினால் உடலின் சக்தி விரயமாகும், தீய சக்திகள் அண்டக் கூடும் என நம்பப்பட்டதால் அவற்றைத் தவிர்த்தார்கள்.

தலையணைக்குத் தடை விதித்த மன்னர்

அவ்வகையில் பார்க்கும்போது கிரேக்கர்களும், ரோமானியர்களும்தான் முதன்முதலில் இன்றைய தலையணையைப் போன்றே துணியாலான தலையணைகளைப் பயன்படுத்தினார்கள். பறவை இறகு, வைக்கோல் போன்றவற்றைத் துணிகளில் திணித்து அவர்கள் தலையணை செய்தார்கள்.

ஆனால் ஐரோப்பாவின் மத்திய காலகட்டம் (5-15 நூற்றாண்டுவரை) தலையணையைக் கவுரவத்தின் அடையாளமாகப் பாவித்தது. மன்னர் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தவிர எவரும் தலையணை வைத்திருக்கக் கூடாது என மன்னர் எட்டாம் ஹெண்ட்ரி ஆணைப் பிறப்பித்தார். கர்பிணி பெண்கள் மட்டும் ஒரே விதிவிலக்கு எனவும் கூறினார். அதன் பின் தொழில்புரட்சியின் போதுதான் தலையணைகள் பேரளவில் உற்பத்தி செய்யப்பட்டுச் சாமானியர்களின் சராசரிப் பொருளாக மாறின. இதில் சுவாரசியமான தகவல் என்ன வென்றால், தொழிற்புரட்சி காலத்துத் தலையணைகள் இன்றும் பிரிட்டனில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

நவீன தலையணைகள்

சதுரம், நீள் சதுரம் மட்டுமல்லாமல் பல்வேறு வடிவங்களில் இன்று தலையணைகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, தனிமையைப் போக்கும் வகையில் நம்மைக் கட்டி அணைத்தாற்போல வடிவமைக்கப்பட்ட தலையணை, தலைக்குப் பின்னால் கைவைத்து தூங்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு உகந்த தலையணைகள். உட்கார்ந்தபடி நெடு நேரம் பயணம் செய்வது மிகவும் அலுப்பூட்டும் விஷயம். சோர்ந்துபோய் தூங்கி விழுந்தால் கழுத்து சுளுக்கிக்கொள்ளும்.

அப்போது கழுத்துக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தலையணைகள் பயன்படுத்தலாம். வீட்டுத் தோட்டத்தில் வண்ணமயமான தலையணைகளைத் திவான் அல்லது சோபாவில் பரத்தி சாய்த்து மாலைப் பொழுதை ரசித்துக் கழிக்கலாம். குழந்தைகளுக்குப் பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள், உணவுப் பண்டங்கள் எனத் தினுசுதினுசாக வடிவமைக்கப்பட்ட தலையணைகள் வந்துவிட்டன. அவற்றில் சாய்ந்து படுத்தால் தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகள் மட்டுமல்ல நாமும் மகிழ்ச்சியாகத் தூங்குவோம்.

முத்தாய்ப்பாக மீண்டும் ஆதிகாலத்தை நினைவுபடுத்தும் விதமாக கல் போல காட்சியளிக்கும் தலையணைகள் இன்று பிரபலமாகி வருகின்றன. கொட்டி வைத்த கூழாங்கற்களைப் போல இருக்கும் இந்தத் தலையணைகளில் குதித்துக் குதூகலமாக விளையாடித் தூங்க குழந்தைகள் மிகவும் இஷ்டப்படுவார்கள். இப்படிப் பல்லாயிரம் ஆண்டுகளை, பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் கடந்து வந்த தலையணைகளில்தான் இன்று நாம் சாய்ந்து சுகமாகத் தூங்குகிறோம் என நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!


வீட்டு அலங்காரம்அலங்கார பொருட்கள்தலையணைகள்கலைநயம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author