

2015-16-ம் நிதியாண்டில் 8.5 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:
வியர்வை சிந்த உழைக்கும் விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மை கடன் வரம்பு இலக்கு மிக அதிகபட்சமாக 8.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இலக்கை வங்கிகள் எளிதாக தாண்டிவிடும் என்று நம்புகிறேன்.
வங்கிகளில் விவசாயிகள் 7% வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். உரிய காலத்தில் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப் படும்.
நபார்டு வங்கியின் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கப்படுகிறது. மேலும் கிராமப்புற நீண்ட கால கடன் திட்டங்களுக்காக ரூ.15,000 கோடி, குறுகியகால கிராம கூட்டுறவு கடன்களுக்காக ரூ.45,000 கோடி, கிராமிய வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா, பிரதான் மந்திரி கிராம சிசாய் யோஜனா திட்டங்களில் சொட்டுநீர் பாசனத்துக்காக ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். விவசாய நிலங்களின் பரப்பளவு அதிகரிக்கப்படும். வேளாண் சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.