

உள்ளூர் ஊடகத்தில் பணியாற்றி வரும் ராஜேஷ் குமாருக்கு தெரியாது... தான் எடுத்த ஒரு புகைப்படம் தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்று.
ஓர் ஆழமான புகைப்படம் அது. வெளிப்பூச்சு முற்றுபெறாத அந்த 4 அடுக்குமாடி கட்டத்தில் தொங்கிய சாரத்தில் ஏறி பெருங்கூட்டம் ஒன்று ஜன்னல்களை அடைந்திருந்தது.
எதற்காகவென்றால், உள்ளே 10-ம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு 'பிட்' கொடுப்பதற்காக. சாரத்தில் தொங்கிக் கொண்டும், ஜன்னலில் நின்றபடி இருந்தவர்களோ உள்ளே தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்களின் பெற்றோர்கள், உற்றார், உறவினர், நன்பர்கள் மற்றும் சுற்றத்தார்.
பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டம் மனார் கிராமத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளிக் கட்டடம்தான் மேற்கூறிய காட்சிகளுடன் அந்த ஆழமான புகைப்படத்தில் அப்பட்டமாக பதிவாகியிருந்தது.
விளைவு, அந்த புகைப்படம் ஊடக உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அந்தப் புகைப்படம் பிஹார் மாநில அரசை அதிர வைத்திருக்கிறது. புகைப்படத்தைப் பார்த்த பாட்னா நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக மாநில போலீஸ் உயர் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுதும் தேர்வு மையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை 15 லட்சம் ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். மாநிலம் முழுதும் தேர்வு மோசடி தொடர்பாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலீஸாரால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால், இத்தனை களேபரத்துக்கும் இடையே புகைப்படத்துக்கு சொந்தக்காரர் மிக அடக்கமாக சலனம் ஏதுமில்லாமல் ஒரு ஞாநி போல் இருக்கிறார்.
ராஜேஷ் குமார். வைஷாலி மாவட்டத்தில் இருந்து வெளியாகும் இந்தி நாளிதழ் சஹேதி-தேஸ்ரியில் புகைப்படக்காரராக இருக்கிறார்.
இவர்தான், இத்தனை நடவடிக்கைகளுக்கும் புகைப்படம் மூலம் வித்திட்டவராவார்.
'தி இந்து'விடம் (ஆங்கிலம்) அவர் கூறும்போது, "எனது புகைப்படம் வேகமாக பரவியது. ஆனால், என் பெயர் எந்த இடத்திலும் பேசப்படவில்லை. வழக்கம் போல் ஹாஜிப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு மட்டுமே என் புகைப்படத்தை அனுப்பினேன். மறுநாள் அது எங்கள் நாளிதழில் வந்தது. அடுத்தடுத்த நாட்களில் தேசிய, சர்வதேச ஊடகங்களில் வெவ்வேறு ஏஜென்சிகளின் போட்டோ கிரெடிட்டுடன் அவை வெளியாகின. அது எனக்கு வேதனை அளித்தது.
நான் ஒரு சாதாரண உள்ளூர் புகைப்படக்காரர். என்னால் வேறு என்ன செய்துவிட முடியும். இருப்பினும், எனது ஒரு புகைப்படத்தால் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது எனக்கு திருப்தியளிக்கிறது. அந்த புகைப்படத்தை எடுத்த பின்னர், இப்போதெல்லாம் உள்ளூர்வாசிகள் என்னை கையில் கேமராவுடன் பார்த்தாலே ஆத்திரத்தில் துரத்துகின்றனர்" என்றார்.
ராஜேஷின் புகைப்படம் தொடர்பாக சஹேதி-தேஸ்ரி பத்திரிகையின் ஆசிரியர் ஷைலேஷ் குமார் கூறும்போது, "ராஜேஷ் வழக்கம்போல் எங்களுக்கு அந்த புகைப்படத்தை அனுப்பினார். ஆனால், அந்த புகைப்படத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் அப்போது எதிர்பாக்கவில்லை" என கூறினார்.