

ஆயுதப்படை சட்ட விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக முடிவு எடுக்க மாட்டோம் என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
காஷ்மீரில் கதுவா மாவட்டம், ராஜ்பாக் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்து, ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை ஜிதேந்திர சிங் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை தொடர்வதா அல்லது திரும்பப் பெறுவதா என்பது குறித்தெல்லாம் நன்கு ஆராய்ந்தும், பாதுகாப்பு படையினர் தரும் குறிப்புகளின் அடிப்படையிலும் முடிவு எடுக்கப் படும். இதுபோன்ற உணர்வுப் பூர்வமான விஷயங்களில் அரசியல் காரணங்களுக்காக முடிவுகள் எடுக்க மாட்டோம்.
பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பயங்கரவாத செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கூறியுள்ளார். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.
ராஜ்பாக் காவல் நிலையம் மீதான தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். இதுபோன்ற சம்பவங்களில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்துவது குறித்து ஆராயும்படி உள்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.