Last Updated : 07 Mar, 2015 06:22 PM

 

Published : 07 Mar 2015 06:22 PM
Last Updated : 07 Mar 2015 06:22 PM

ஒபாமாவின் தலையை நோக்கி சுட்டிருப்பேன்: ஐ.எஸ். ஆதரவு அமெரிக்க இளைஞர் பேட்டியால் பரபரப்பு

தான் கைதாகாமல் இருந்திருந்தால், வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலையில் துப்பாக்கியால் சுட்டிருப்பேன் என்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவான கருத்தை டி.வி. நிகழ்ச்சியில் இளைஞர் தெரிவித்திருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லீ (20) என்ற இளைஞர் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக செயலப்பட்டு வந்த குற்றத்துக்காக ஜனவரி 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஐ.எஸ். இயக்க கட்டளைகளுக்கு இணங்க, அமெரிக்க மாகாண செனெட் சபை கட்டடங்கள் மற்றும் இஸ்ரேல் தூதரகத்தை தாக்குவதற்காக வெடிப் பொருட்கள், ஆயுதங்களைச் சேகரித்தது, கொலை முயற்சி, ஐ.எஸ். இயக்கத்துக்கு கூலியாக வேலை பார்த்தது, அரசு ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் இவருக்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிறையில் இருந்தவாறு லீ அளித்த தொலைப்பேசி வழிப் பேட்டியை சின்சினாட்டியின் WXIX என்கிற சேனல் வெளியிட்டது. நீங்கள் கைதாகாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று பேட்டிக் காண்பவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய லீ,

" நான் எனது துப்பாக்கியை எடுத்து, அதன் குண்டுகளை ஒபாமாவின் தலைக்குள் பாயச் செய்திருப்பேன். வெள்ளை மாளிகை, செனட் கட்டடங்கள், ரஷ்ய தூதரகம் மற்றும் பல கட்டடங்களைத் தாக்கி இருப்பேன்" என்று கூறியுள்ளார்.

மேலும், பேட்டி முழுவதிலும் தன்னை ஒரு இஸ்லாமியர் என்று சொல்லிக்கொள்ளும் லீ, "என்னை அவர்கள் தீவிரவாதி என்று கூறலாம். ஆனால் நாங்கள் அமெரிக்கப் படைகளை தீவிரவாதிகளாக காண்கிறோம். எங்களது நிலத்தை ஆக்கிரமித்து, வளங்களை திருடி, எங்களை கொலை செய்து, எங்கள் பெண்களைப் பலாத்காரத்துள்ளாக்கும் அமெரிக்கப் படைகளை நாங்கள் தீவிரவாதிகள் என்றழைப்போம்.

அமெரிக்கா தொடர்ந்து எங்களது மக்களுக்கு எதிராக நடந்து வருகிறது. குறிப்பாக அதிபர் ஒபாமா இஸ்லாமிய அரசுடன் மோதுவதுதற்கு நிச்சயமான பலனை பெறுவார்.

நீங்கள் நினைப்பது போல நாங்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. நாங்கள் இங்கு ஓஹியோவில் இருக்கிறோம். ஒவ்வொரு மாகாணத்திலும் இருக்கிறோம். நீங்கள் நினைப்பதை விட மிக நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் நாங்கள் செயல்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் இந்தப் பேட்டி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கிறிஸ்டோபர் லீயின் வழக்கும் மேலும் சிக்கலடைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x