

டெல்லி பாலியல் பலாத்காரம் தொடர்பாக 'இந்தியாவின் மகள்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப்படத்துக்காக, அந்த வழக்கின் குற்றவாளியை பேட்டி கண்டதையும், அதை செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் விவாதப் பொருளாக்கியதையும் விமர்சித்து, சமூக வலைதளத்தில் இணையவாசிகள் தங்கள் ஆதங்கத்தைப் பதிந்து வருகின்றனர்.
2012 கடந்த டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த படத் தயாரிப்பாளரும் ‘பாப்டா’ விருது பெற்றவருமான லெஸ்லி உட்வின் பிபிசியுடன் இணைந்து ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். அந்தப் படம் வரும் 8-ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.
டெல்லி பாலியல் சம்பவம் தொடர்பாக பிரிட்டன் படத் தயாரிப்பாளர் லெஸ்லி உட்வின் எடுத்த ஆவணப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
இவ்வழக்கின் குற்றவாளி ஒருவர் திஹார் சிறைக்குள்ளிருந்து அளித்த பேட்டி தொடர்பாக, சிறையினர் இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
'இந்தியாவின் மகள்' என்ற அந்த ஆவணப்படத்தில் பலாத்கார குற்றவாளி கூறிய கருத்துக்களை 'தி டெலகிராஃப்' வெளியிட்டதிலிருந்தே, பலாத்காரத்துக்குள்ளாகி இறந்த அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் வார்த்தைகளால் பலாத்காரம் செய்ய வேண்டாம் என்று பலத் தரப்பினர் தங்களது ஆழ் மனதின் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
"ஒரு கை ஓசை எழுப்ப முடியாது. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். நாகரிகமான இளம்பெண் இரவு 9 மணிக்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்க மாட்டாள்" என்று குற்றவாளி முகேஷ் கூறியுள்ளது சமூகத்தின் கோபத்தை மீண்டும் தட்டி எழுப்பியுள்ளது.
ஆங்காகேங்கே போராட்டங்களும் வெடித்துள்ளன. குற்றவாளியிடம் பேட்டிக் கண்டுள்ள தொலைக்காட்சிக்கு எதிராகவும் எதிர்மறை கருத்துக்கள் எழுகின்றன. இந்தச் சூழலில் 'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசும் தடை விடுத்துள்ளது.
இந்த சர்ச்சையின் தாக்கம் சமூக வலைதளங்களிலும் பரவியிருக்கிறது. ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளிப்படும் கருத்தாக்கங்களால் #NirbhayaInsulted என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.
ஃபேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள கருத்துக்களில் சில:
ரூபிந்தர்: நிர்பயா ஒருமுறை பலாத்காரத்துக்குள்ளாகி ஒரு முறை இறந்தார். ஆனால் இந்த நாடு அவரை தினம் தினம் பலாத்காரம் செய்கிறது. கொலை செய்கிறது.
கதார் பயாக்: குற்ற சம்பவத்தில் இருந்த அனைவரின் மனநிலையையும் கேட்டு அறிவது நியாயமானதுதான்
சிட்டிஸன் ஜர்னலிஸ்ட்: இந்தியாவில் மட்டுமே அவை அனைத்தும் நடக்கும். குற்றவாளியை தூக்கி நிறுத்தும் ஊடகங்கள். நேரகாணல், லைம் லைட் கவரேஜ். அதீத கேவலம்.
வீ ஆர் ராஸ்கல்ஸ்: பலாத்கார குற்றவாளிக்கு ஊடகங்கள் இடம் கொடுக்கின்றன. பிரிட்டன் ஊடக நேர்காணலை இந்திய ஊடகங்கள் ஒளிபரப்பி புகழ் தேடுகின்றன.
யோ யோ ஹனி சிங்: லெஸ்லி உட்வின் இதில் தானா புகழ் தேட வேண்டும். ஊடகச் சுதந்திரம் இதற்காகவா பயன்படுகிறது?
ட்விட்டரில் இடம்பெற்ற கருத்துக்கள்:
அம்ருதேஷ் உபத்யாய (@Mr_Amritesh): நாம் நல்ல டாக்டர்களையும், இன்ஜீனியர்களையும் உருவாக்கிறோம். ஆனால் நல்ல மனிதரை வளர்க்கவில்லையே.
சுனந்தா ரானா (@ranasunanda): பலாத்காரக் குற்றவாளி என்ன சொல்லப்போகிறார்? நான் பெண்களை மதிக்கிறேன் என்று நிச்சயம் சொல்லமாட்டார். அவரிடம் நேர்காணல் நடத்தினால் இப்படிதான் நடக்கும்.
அஃப்ரிதா ரகுமான் அலி (@AfridaRahmanAli ): இது வெறும் குற்றமும் தண்டனையும் சார்ந்த விஷயம் அல்ல. இந்த சமூதாயமே நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான மருந்தை தேட வேண்டும்.
அரேபிக்கா (@arabicaah): குற்றவாளி அளித்த நேர்காணலினால் நிர்பயாவுக்கு அவமானம் இல்லை. அவர்கள் உயிரோடு இருப்பதே நிர்பயாவுக்கு அவமானம் தான்.
டாக்டர் நீலு கோசுவாமி (@NeelakshiGswm): பத்திரிகையாளர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு, இறந்த பெண்ணை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்யக் கூடாது.