

குடிபோதையில் கார் ஓட்டி, ஒருவரைக் கொன்றது மற்றும் மேலும் நான்கு பேரைக் காயப்படுத்தியது தொடர்பான வழக்கில் நடிகர் சல்மான் கான் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2002ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சாலை யோரத்தில் படுத்திருந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் இதுவரை 25 சாட்சியங்களுக்கு மேல் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சல்மான் கான் வெள்ளிக்கிழமை மும்பை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் போது தான் குடிக்கவும் இல்லை, வண்டி ஓட்டவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
சுமார் 3 மணி நேரம் கோர்ட்டில் சல்மான் வாக்குமூலம் அளித்தார். நீதிபதி தேஷ்பாண்டே 419 கேள்விகளை சல்மானிடம் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த சல்மான் கான், “என்னால் விபத்து ஏற்படவில்லை. என் மீதான பொய்க் குற்றச்சாட்டு இது” என்றார். மேலும் ஒரு கேள்விக்கு பதில் அளித்த போது, “மதுபானம் அருந்த பெர்மிட் தேவை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் குடிக்கவில்லை என்பதுதான் உண்மை.
விபத்து நடக்கும் போது நான் காரை ஓட்டவில்லை. எனது ஓட்டுனர் அசோக் சிங் காரை ஓட்டினார்.” என்று கூறினார் சல்மான்.
மேலும், சாலைப் போக்குவரத்து அதிகாரி 2002-ம் ஆண்டு தன்னிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்று கூறி தவறான அறிக்கை சமர்ப்பித்தார் என்று கூறிய சல்மான், எஃப்.ஐ.ஆர். ஏன் போடப்பட்டது? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல் சம்பவம் நடக்கும் போது காரில் தூங்கிக் கொண்டிருந்தார் என்று கூறினார்.