

மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு சர்ச்சை மீது, பரவலான கூக்குரலுக்கு இணங்கி அவசர அவசரமாக எடுக்கப்படும் முடிவு நிச்சயம் தவறானதாகவே இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
ஒரு குற்றவாளியின் குரலுக்கு பொருத்தமற்ற முக்கியத்துவம் அளிப்பதா என சமூகத்தின் ஒரு சில பிரிவினர் வெகுண்டெழுந்த காரணத்துகாக, பிரிட்டன் திரைப்பட இயக்குநர் லெஸ்லி உட்வினின் 'இந்தியாவின் மகள்' (India's Daughter) என்ற ஆவணப்படத்தை ஒளி/ஒலிபரப்ப விதித்திக்கப்பட்டிருக்கும் தடையும் அவசரமாக தகுந்த பரிசீலனை இல்லாமலேயே எடுக்கப்பட்ட முடிவின் விளைவே.
டெல்லி பாலியல் பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுப்பதற்காக உள்துறை அமைச்சகத்திடம் இருந்தும், திகார் சிறை அதிகாரிகளிடம் இருந்தும் உரிய அனுமதி பெற்றதாக இயக்குநர் கூறியிருந்தும் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினத்தன்று அந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகி சர்ச்சைகள் உருவானதை அடுத்தே போலீஸார் உட்வின் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள அந்தப் பேட்டியை பொதுமக்கள் பார்வைக்கு ஒளிபரப்ப விதிக்கப்பட்டுள்ள தடைக்கான ஒரே காரணம் "பலாத்காரம், கொலைக்கு பெண்ணே காரணம். நிர்பயா ஒத்துழைத்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என குற்றவாளியே கூறியிருப்பதுதான்" என்று கூறப்படுகிறது.
இந்த இடத்தில் முன்வைக்கப்படும் விவாதம் என்னவென்றால், முகேஷ் சிங் போன்ற ஒரு வெறுக்கத்தக குற்றவாளியின் கருத்துகளை பதிவு செய்வது நெறிகளுக்கு புறம்பானதா? இல்லை அத்தகைய பேட்டிகள் வெளிக்கொண்டுவரப்படுவதை தடுப்பதே சரியான தீர்வா? என்பதே.
ஒரு பயங்கரமான குற்றத்தை நியாயப்படுத்தியும், குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபரையே தரக்குறைவாக விமர்சித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளியே அளிக்கும் பேட்டியை கேட்கவோ, பார்க்கவோ அருவருப்பாக இருக்கும் என்பது உண்மைதான். அதை மறுப்பதற்கில்லையே.
அதே அளவுக்கு உண்மையானது, அத்தகைய வாக்குமூலங்களையும் பதிவு செய்து அதை ஒளிபரப்பி அதன் மூலம் குற்றங்கள் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டுவதில் ஒருவகை சமூக நலச் சிந்தனை பொதிந்திருக்கிறது என்பதும்.
இத்தகைய ஆவணப்படங்கள் மூலம் சமூகமே இத்தகைய எதிர்மறை சிந்தனைகளை அடையாளம் கண்டு கொள்ளவும் அதை எதிர்த்து நிற்கவும் வழிவகுக்கும்.
ஆவணப்படம் வெளியாவதற்கு முன்னரே அதன் தன்மையை கணிப்பது சற்றும் நியாயமற்றது. தனது முயற்சி, "பாலின சமத்துவத்தைக் கோரும் ஒரு உணர்ச்சிகரமான கோரிக்கை" என்ற இயக்குநர் உட்வினின் வார்த்தைகளையும் பரிசீலித்திருக்க வேண்டும்.
அதைவிடுத்து, இத்தகைய ஆவணப்படங்கள் பலாத்காரகரின் மனப்பாங்கினையே வலுப்படுத்தும். பாலியல் வன்முறைகளை அத்துமீறல்களை சகித்துக் கொள்ளும் கலாச்சாரத்தில் இருந்து அதனை எதிர்க்கும் சமூகப் பார்வை, சட்ட அமைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் என்றெல்லாம் யூகித்துக் கொள்வது தவறான பார்வை.
இந்தியாவில் முன்பைவிட வலுவான சட்டங்கள் உள்ளன. பாலியல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளும், அவற்றைக் கையாளும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் பாலின சமத்துவத்தைப் பேணுவதில் மிகுந்த பொறுப்புடனேயே நடந்து கொள்கின்றனர். ஆனாலும், உண்மையான மாற்றத்துக்கான வித்து சமூகத்திடமே உள்ளது. சமூகத்தின் பார்வை, அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டாலே இவ்விவகாரத்தில் பெரியளவில் மாற்றம் ஏற்படும்.
லெஸ்லி உட்வின் தயாரித்துள்ளது போன்ற ஆவணங்கள், மேற்கூறிய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும். அப்படியே இத்தகைய ஆவணங்கள் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும்கூட அவற்றை தடை செய்வது என்பது தீர்வாகாது.
இத்தகைய தடை ஒரு எதிர்வினையை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
இந்தத் தடை, இந்தியாவில் நிகழும் பாலியல் வன்முறைகளின் அடிப்படையாக ஆணாதிக்கம் இருப்பதை உறுதி செய்வதாகிவிடும்.
இந்தத் தடை பலாத்கார கலாச்சாரத்தை தூக்கி நிறுத்துவது போன்றும், இந்திய அரசியல், அதிகார மையங்கள் ஆணாதிக்கத்தில் இன்னமும் திளைத்திருப்பதாகவும் சொல்லப்பட்ட வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கும்.
எனவே, பாலின சர்ச்சைகளில் இருந்து வெகுதூரத்தில் விலகி இருக்கும் ஒரு சமூகம் தன்னை அடையாளம் கண்டு கொள்ள உதவும் கண்ணாடியாகவே இத்தகைய ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டும்.
© தி இந்து ஆங்கிலம்
| தமிழில் பாரதி ஆனந்த்|