

நாட்டை உலுக்கிய மேற்கு வங்க மாநில கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவத்துக்கு மாநில அரசு கோரியிருந்த சிபிஐ விசாரணையை மத்திய அரசு நிராகரித்தது.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கங்கனாபூர் அருகே ரனாகட்டில் ஜீசஸ் மேரி கான்வென்ட் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கன்னியாஸ்திரிகள் தங்கும் இல்லமும் உள்ளது. இங்கு கடந்த 14-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் உள்ளே புகுந்து பள்ளியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது.
அதை தடுக்க வந்த 71 வயது கன்னியாஸ்திரியை அந்த கும்பல் பலாத்காரம் செய்துவிட்டு, ரூ.12 லட்சத்தையும் கொள்ளை அடித்து சென்றது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்திருந்தார். ஆனால், மத்திய அரசு அவரது கோரிக்கையை இன்று நிராகரித்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள், மம்தா பானர்ஜியின் சிபிஐ விசாரனை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றும் இதனை ‘வருத்தத்துடன்’ மேற்கு வங்க அரசுக்கும் தெரிவித்து விட்டதாகக் கூறினர்.