

உத்தரப் பிரதேசம் ஹசிம்புராவில் கடந்த 1987ஆம் ஆண்டு 42 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 போலீஸாரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 1987-ம் ஆண்டு மே மாதம் உத்தரப் பிரதேசம் மீரட் அருகேயுள்ள ஹசிம்புராவில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் போலீஸ் படை மற்றும் உத்தரப் பிரதேச அரசின் சிறப்பு அதிரடிப் படை (பிஏசி) போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இதில் பிஏசி படை போலீஸார் 1987 மே 22-ம் தேதி 42 முஸ்லிம்களை சிறைபிடித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தப் படுகொலையின்போது உயிர் பிழைத்த சிலர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
காஜியாபாத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ் வழக்கில் 1996-ம் ஆண்டில் 19 போலீஸாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2002-ம் ஆண்டில் டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணையின்போதே 3 போலீஸார் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 16 பேர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
படுகொலை சம்பவம் நடைபெற்று சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் ஜிண்டால் அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 16 போலீஸாருக்கும் எதிராக உறுதியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை, எனவே அவர்களை விடுதலை செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.