

மகாராஷ்டிர மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த மகளின் சடலத்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பியபோது நிகழ்ந்த மற்றொரு விபத்தில் பெற்றோரும் பலியாயினர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து இறந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ரத்தினகிரி மாவட்டம் கேத் நகரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தனகதம் (17), செட் தேர்வு (பொது நுழைவுத் தேர்வு) எழுதுவதற்காக தனது தந்தையின் ஆட்டோரிக் ஷாவில் வியாழக்கிழமை காலை ரத்ன கிரிக்கு சென்று கொண்டிருந்தார்.
மும்பை-கோவா நெடுஞ்சாலை யில் சங்கமேஸ்வர் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் தன படுகாய மடைந்தார்.
ரத்னகிரி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, தனயின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இவரது பெற்றோர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது.
இதுகுறித்து ரத்னகிரி மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் நந்தகுமார் தாகுர் கூறுகையில், "தனயின் பெற்றோர் பிரவீன் (40) மற்றும் பிரியங்கா கதம் (38) உறவினர் நரேஷ் தேவ்ரே (50) ஆகியோர் மாருதி 800 காரில் ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து சென்றனர்.
ஹாத்கம்பா-ரத்னகிரி சாலையில் இவர்கள் சென்ற கார் மீது டிரெய்லரில் ஏற்றிச் சென்ற ஜேசிபி இயந்திரம் விழுந்தது. இதில் பிரவீன் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் இறந்தனர்" என்றார்.
இவர்களது இளைய மகன் சிவம் (15) மட்டும் வீட்டில் இருந்த தால் விபத்திலிருந்து தப்பி உள்ளார். ஆட்டோ ஓட்டி வந்த பிரவீன் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் அதில் காயமடைந் தவர்களுக்கு உடனடி யாக உதவி செய்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.