

உத்தராகண்ட் மாநிலம், பித்தோர்கார் மாவட்டத்தில் சோதனைச் சாவடி மீது பனிச்சரிவு ஏற்பட்டதில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரை காணவில்லை.
பித்தோர்கார் மாவட்டம், சியாலக் என்ற இடத்தில், இந்திய நேபாள எல்லையில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு குமாவோன் ஸ்கவுட்ஸ் ரெஜிமென்ட் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சோதனைச்சாவடி மீது பனிச்சரிவு ஏற்பட்டதில் அங்கு பணியில் இருந்த 8 வீரர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற மீட்புப் பணியில் 5 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேரின் சடலம் மீட்கப்பட்டது. ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மற்றொரு சம்பவமாக, பாகேஷ்வர் மாவட்டம், கப்கோட் என்ற இடத்தில் நேற்று நிலச் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.