Last Updated : 21 Mar, 2015 09:16 AM

 

Published : 21 Mar 2015 09:16 AM
Last Updated : 21 Mar 2015 09:16 AM

தேர்வில் முறைகேட்டைத் தடுக்க முடியாதா?- அமைச்சரின் விளக்கம் வெட்கக்கேடானது: பிஹார் உயர் நீதிமன்றம் கண்டனம்

‘‘நேர்மையாகத் தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் கூறியிருப்பது வெட்கக்கேடானது’’ என்று பிஹார் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிஹார் மாநிலத்தில் 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் பொதுத் தேர்வு நடந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க, பெற்றோர்களும் நண்பர்களும் துண்டு சீட்டில் (பிட்) விடைகளை எழுதி தேர்வு மையங்களுக்குள் போட்டனர். தேர்வு மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 4 மாடி கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஏறி, தேர்வெழுதும் மாணவர்களுக்கு துண்டுச் சீட்டு போடும் படம் பத்திரிகைகளில் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிஹாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில்தான் அதுபோன்ற முறைகேடு நடந்தது. துண்டுச் சீட்டுகளை தேர்வு மையங்களுக்குள் போடுவது, அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. முக்கியமான தேர்வுகளில் எல்லாம் இப்படித்தான் நடக்கிறது. இது வைஷாலி மாவட்டத்தில் மட்டும் அல்ல. மாநிலம் முழுவதும் இதே நிலைதான் என்கின்றனர்.

இதுகுறித்து பிஹார் கல்வித் துறை அமைச்சர் பி.கே.ஷாஹி கூறியதாவது:

தேர்வில் முறைகேடு நடப்பது உண்மைதான். பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லாமல், முறைகேடுகள் இன்றி தேர்வு நடத்த முடியாது. மாநிலத்தில் மொத்தம் 14 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 1,217 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் உள்கட்டமைப்புகள் இல்லை. பல தேர்வு மையங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுகின்றனர்.

இவ்வளவு எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்வது சாதாரண விஷயமல்ல. பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லாமல், நேர்மையான தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் இந்த சமுதாயமும் நேர்மையாக தேர்வு நடத்த உதவ வேண்டும். எனவே, மாணவர்கள் தேர்வு எழுதும்போது, அவர்கள் காப்பி அடிக்க உதவுவதைப் பெற்றோர் முதலில் நிறுத்த வேண்டும்.

தேர்வில் முறைகேடு செய்வது பிஹாரில் மட்டுமல்ல நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. எனினும், முறைகேடுகளைத் தடுக்க பாதுகாப்பை அதிகரிக்கும்படி தலைமைச் செயலர் அஞ்சனி குமார் சிங், போலீஸ் டிஜிபி பி.கே.தாக்குர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஷாஹி கூறினார்.

அமைச்சரின் விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் ஒருவர், பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘அமைச்சரின் பதில் வெட்கக்கேடானது. அமைச்சரின் பதில் அதிருப்தி அளிக்கிறது. மாநிலத்தில் நேர்மையாகத் தேர்வு நடத்துவதை உறுதி செய்ய டிஜிபி பி.கே.தாக்குர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதுவரை நடந்த 2 தேர்வுகளில் துண்டுச் சீட்டு வழங்கியது தொடர்பாக 515 மாணவர்கள், 7 பெற்றோர்களை கைது செய்துள்ளதாக மாநிலத் தேர்வு வாரிய சிறப்பு படை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி இறுதித் தேர்வு நடக்கும் போதெல்லாம் ஏதாவது வன்முறை நடப்பது பிஹாரில் வழக்கமாகி விட்டது. மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோரும் நண்பர்களும் துண்டுச் சீட்டில் விடைகளை எழுதித் தருவது, அடியாட்களுடன் தேர்வு மையங்களுக்கு வந்து மிரட்டுவது போன்ற செயல்கள் சாதாரணமாக நடக்கிறது. இதனால் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை என்கின்றனர்.

ஆனால், தரமற்ற வகையில் கல்வி கற்பித்தல், தேர்வு முறை போன்ற பல காரணங்களால்தான் முறைகேடுகள் நடக்கின்றன. தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்காக இருக்க கூடாது. ஆனால், துரதிருஷ்டவசமாக அதுதான் முக்கியமாக இங்கு இருக்கிறது என்று தேர்வு வாரிய முன்னாள் தலைவர் ராஜ்மணி பிரசாத் சின்ஹா வருத்தம் தெரிவித் துள்ளார்.

தேர்வு வாரியத்தின் மற்றொரு முன்னாள் தலைவர் ஏ.கே.பி.யாதவ் கூறும்போது, ‘‘தரமற்ற கல்வி, ஆசிரியர்கள் பற்றாக்குறை, பல பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, கற்பித்தலில் தொடர்ச்சி இல்லாதது போன்றவைதான் இப்போதைய நிலைக்குக் காரணம்’’ என்று குற்றம் சாட்டுகிறார்.

இதற்கிடையில், தேர்வில் முறைகேட்டை தடுக்கும் விஷயத்தில் நிதிஷ்குமார் அரசு தோல்வி அடைந்து விட்டது என்று பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நந்த கிஷோர் யாதவ் (பாஜக) கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது: முதல்வர் நிதிஷ்குமார் வருத்தம்

பொதுத் தேர்வின் போது பெற்றோர்கள் மோசடிகளில் ஈடுபட வேண்டாம் என்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்வில் முறைகேடு நடந்த தகவல் அறிந்த வுடன், உயரதிகாரிகளுடன் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் நிதிஷ்குமார் கூறும்போது, ‘‘மாணவர்கள் 10-ம் வகுப்பு சான்றிதழை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிவிட முடியாது. திறமையால் மட்டுமே ஒருவர் முன்னுக்கு வரமுடியும். எனவே, தேர்வில் மோசடி செய்வதை பெற்றோர்கள் முதலில் நிறுத்த வேண்டும்’’ என்றார்.

தனது முகநூல் பக்கத்தில் நிதிஷ் குமார் கூறும்போது, ‘‘வைஷாலி மாவட்டத்தில் மட்டும்தான் அதுபோல் முறைகேடு நடந்துள்ளது. பிஹார் மாநிலம் முழுவதும் இப்படித்தான் நடந்தது என்று கூறுவது தவறு. பிஹார் மாநில மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். தங்கள் திறமைகளை அவர்கள் உலகம் முழுவதும் நிரூபித்துள்ளார்கள். வைஷாலி மாவட்ட தேர்வு மையத்தின் புகைப்படம் மீடியாவில் வெளியானதால், திறமையான பிஹார் மாணவர்களை இருட்டடிப்பு செய்து விட முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x