Last Updated : 20 Mar, 2015 12:42 PM

 

Published : 20 Mar 2015 12:42 PM
Last Updated : 20 Mar 2015 12:42 PM

உத்தரப்பிரதேசத்தில் பரிதாபம்: ரயில் தடம் புரண்டு 34 பேர் பலி - 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தடம் புரண்டதில் 34 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

‘டேராடூன்-வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ்’ ரயில் நேற்று முன்தினம் இரவு உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகருக்குப் புறப்பட்டது.

இந்த ரயில் உத்தரப்பிரதேசத்தின் பச்ராவன் ரயில் நிலையம் அருகே நேற்று காலை 9.10 மணிக்கு வந்து கொண்டிருந்தது. வழக்கமாக பச்ராவன் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும். ஆனால், இன்ஜின் டிரைவர் சிக்னலை கவனிக்காமல் ரயிலை வேகமாக இயக்கினார். சிறிது நேரத்தில் தனது தவறை உணர்ந்த டிரைவர், எமர்ஜென்ஸி பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்த முயன்றார். அப்போது ரயில் இன்ஜினும் அதற்கடுத்த இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டன.

ரயிலின் வேகத்தில் இன்ஜின் பின்னால் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று பயங்கரமாக மோதின. இதில் தடம் புரண்ட இரண்டு பெட்டிகளும் சிதைந்தன. இன்ஜினுக்கு அடுத்த பொதுப்பெட்டி அப்பளம்போல நொறுங்கியது.

இந்தக் கோர விபத்தில் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ரேபரேலி மற்றும் லக்னோ அரசு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணியில் கிராம மக்கள்

ரயில் விபத்துக்குள்ளானதும் அக்கம் பக்கத்து கிராம மக்கள் திரண்டு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு சிறிது காலதாமதமானதாகக் கூறப்படுகிறது.

பின்னர், லக்னோவில் இருந்து வந்த ரயில்வே மீட்புக் குழுவினர் காஸ் வெல்டிங் மூலம் ரயில் பெட்டியை உடைத்து காயமடைந்த பயணிகளையும் உயிரிழந்த பயணிகளின் உடல்களையும் மீட்டனர்.

சம்பவ இடத்தில் 24 மருத்துவக் குழுக்கள் முகாமிட்டு காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தன. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் காயமடைந்த பயணிகள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

டிரைவரின் கவனக்குறைவு

முதல்கட்ட விசாரணையில் இன்ஜின் டிரைவரின் கவனக்குறைவே ரயில் விபத்துக்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா கூறும்போது, பச்ராவன் நிலையத்தில் ரயில் நின்று செல்ல வேண்டும். ஆனால், இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தனது தவறை உணர்ந்த அவர், எமர்ஜென்ஸி பிரேக்கை பயன்படுத்தியபோது ரயில் தடம் புரண்டுவிட்டது என்று தெரிவித்தார்.

ரயில் டிரைவர் பிரசாத் மிஸ்ரா, துணை டிரைவர் சுபோத் மற்றும் ரயில்வே கார்டு அனில் குப்தா ஆகி யோர் விபத்தில் படுகாயமடைந் துள்ளனர். அவர்கள் உடல்நலம் தேறி யதும் விபத்து குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

ரயில்வே ரூ. 2 லட்சம் இழப்பீடு

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், சிறுகாயம் அடைந்த வர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்தவும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

உ.பி. அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு

விபத்து குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.உயிரிழந் தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x