

இந்தியாவுக்குள் ரூ. 60 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயினைக் கடத்த முயன்ற 2 பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை எல்லை பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர்.
இதுதொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) டிஐஜி ஆர்பிஎஸ் ஜஸ்வால் கூறும்போது, “ரத்தன் குர்த் சோதனைச் சாவடி பகுதியில் 2 ஊடுருவல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 60 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயின், ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இருவரையும் சரணடையும்படி பலமுறை கூறியும் அதை அவர்கள் செவிமடுக்கவில்லை. இந்திய வீரர்களை நோக்கிச் சுட்டுக்கொண்டே இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். நமது வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இருவர் யார் எனத் தெரியவில்லை” என்றார்.
இந்தியாவில் அவர்கள் யாரிடம் ஆயுதத்தையும், போதை மருந்தையும் ஒப்படைக்க வந்தனர் என்பது குறித்த விசாரணையை பிஎஸ்எஃப் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அமிருதசரஸ் பகுதியில் அஜ்னாலா கிராமம் அருகே ரூ.120 கோடி மதிப்புள்ள 24 கிலோ ஹெராயினை இந்திய எல்லைக்குள் கடத்த முயன்ற பாகிஸ்தானியரை பிஎஸ்எஃப் வீரர்கள் சுட்டுக் கொன்றது நினைவுகூரத்தக்கது.