

பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற மெட்ரிகுலேஷன் (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 515 பேர் பிடிபட்டனர்.
இந்நிலையில், பிள்ளைகள் காப்பி அடிக்க உதவி மாநிலத்துக்கு அவப்பெயர் சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நிதிஷ் குறிப்பிடும்போது, "காப்பி அடித்து மாணவர்கள் பெறும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்யாது. இவ்வாறாக காப்பி அடிக்க உதவி மாநிலத்துக்கு பெற்றோர்கள் அவப்பெயர் சேர்க்க வேண்டாம். இத்தகைய தவறான செயல்களுக்கு போலீஸார் யாராவது துணை போவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எழுக்கப்படும்.
ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு பிஹார் மாநில மாணவர்களின் கல்வித் தரத்தை நிர்ணயிக்கக்கூடாது. பிஹார் மாநில மாணவர்கள் பலர் இன்றளவும் கல்வியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று, தலைநகர் பாட்னாவிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மனார் கிராமத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளி யின் 4 மாடி கொண்ட தேர்வு மையத்தின் சுவர் மீது மாணவர்களின் பெற்றோரும், நண்பர்களும் ஏறி அவர்களுக்கு விடை எழுதிய சீட்டுகளை கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்வை சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 515 மாணவர்கள் காப்பி அடிப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்வு மையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.