

டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: டெல்லி சட்டசபை தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்தோம். காங்கிரஸ் ஆதரவைப் பெற்று முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக, ஏதோ காரணத் தைக் கூறி பதவி விலகினார். நாங்கள் ஆதரவை வாபஸ் பெற வேயில்லை.
இதன்மூலம், தன்னை நம்பி வாக்களித்த டெல்லி மக்களின் நம்பிக்கையை கேஜ்ரிவால் இழந்துவிட்டார். அத்துடன் சட்ட சபையைக் கலைக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு குறிப்பிடத் தக்க வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவுடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் ஒரு பகுதியினர் கருதுவதாகக் கூறப்படுகிறது.
இப்போது தேர்தல் நடைபெற் றால் பாஜகவுக்கு சாதகமாகும் என்பதால் இந்த ஆலோசனையை அவர்கள் முன்வைத்துள்ளதாகக் தெரிகிறது.
ஆனால், அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தினால் அதை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றார்.
அதேநேரம் மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற் றுள்ளதால், பாஜகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.