வாழ்க்கையில் இதுவும் ஓர் அங்கம்: மன்மோகன் கருத்து

வாழ்க்கையில் இதுவும் ஓர் அங்கம்: மன்மோகன் கருத்து
Updated on
1 min read

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஏப்ரல் 8-ம் தேதி ஆஜராகுமாறு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா உட்பட 6 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மன்மோகன் சிங் கூறியதாவது:

இந்த உத்தரவை அறிந்து வருத்தம் அடைந்தேன். எனினும், வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலையும் ஒரு அங்கம்தான். நேர்மையான விசாரணை நடக்கும்போது உண்மை வெளியில் வரும் என்று நம்புகிறேன். சட்டப்படி எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த உண்மைகள் அனைத்தையும் தெரிவிக்க எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ முன்னிலையில் நான் ஏற்கெனவே வாக்குமூலம் தந்திருக்கிறேன். பிரதமர் பதவி வகித்தபோதே, நான் எடுத்த நியாயமான நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையும் வெளியிட்டிருக்கிறேன். நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். உண்மை நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

இது 2-வது முறை

முன்னாள் பிரதமர் ஒருவருக்கு கிரிமினல் வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்புவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு 3 வழக்குகளில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த தாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கு உட்பட 3 வழக்குகளில் நரசிம்மராவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. எனினும், 3 வழக்குகளிலும் ராவ் பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in