

மேகேதாட்டு அணைத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கர்நாடக அரசு மேலும் முனைப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கர்நாடக முதல்வர்சித்தராமையா (இன்று) திங்கள்கிழமை, அம்மாநில சட்டப்பேரவையில் இதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மாநில பட்ஜெட் பற்றிய விவாதத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சித்தராமையா, "மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை நடத்தி, டெல்லிக்கு ஒரு குழுவை அனுப்பி, கர்நாடகாவுக்கு இந்த அணைத் திட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மத்திய அரசுக்கு விளக்கப்படும்.
தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது அரசியல் உள்நோக்கங்கள் கொண்டது. அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
மேகேதாட்டு அணைத் திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கைத் தயாரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சுற்றி குடிநீர் வறண்ட பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தவே மேகேதாட்டு அணைத் திட்டம்.
கிருஷ்ணா, காவிரி நதிநீர் பற்றி அரசியல் எதுவும் இல்லை. மேகேதாட்டு அணையை எங்கள் மாநிலத்துக்குள் நாங்கள் கட்டுகிறோம். தமிழகத்துக்கு இதனால் பாதிப்பு இருக்காது. இருந்தாலும் சட்ட ரீதியாக அவர்கள் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்பதை நாங்கள் அறிவோம்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கிணங்க கர்நாடகா தற்போது 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுகிறது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்" என்றார் சித்தராமையா.