

ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீட்டு வழக்கில், சி.பி.ஐ.யிடம் உள்ள குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க சி.பி.ஐ.க்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை எதிர்த்து மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு சவாண் உட்பட, 13 பேர் மீது சதி ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் கீழ் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், சவாணை விசாரிப் பதற்கு ஆளுநர் அனுமதி தரவில்லை எனவே, குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து சவாண் பெயரை நீக்க அனுமதி கோரி சி.பி.ஐ., கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அப்போது அதனை விசாரித்த நீதிமன்றம், சவாணை சதி ஆலோசனை தொடர்பாக விசாரிப்பதற்குத்தான் ஆளுநர் அனுமதி தரவில்லை. எனினும், சவாணை ஊழல் குற்றத்தின் கீழ் விசாரிக்கலாம் என்று கூறி, சி.பி.ஐ.க்கு அனுமதி தர மறுத்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சவாண் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.