

மேற்குவங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேஸ்புக்கில் கூறியிருப்ப தாவது:
நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த ரனாகட் பகுதியில் உள்ள கங்னாபூர் கான்வென்ட் பள்ளியில் கடந்த 14-ம் தேதி 71 வயது கன்னியாஸ்திரியை கொள்ளை கும்பல் பலாத்காரம் செய்தது. இந்தச் சம்பவம் மிகவும் மோசமானது. குற்றவாளிகளை பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீ ஸாரும் உரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடம் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. எனவே, உணர்வுப் பூர்வமான இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் புலனாய்வு நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும். இவ்வாறு அதில் மம்தா கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து சிஐடி விசாரணைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக 15 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.
நீதி கிடைக்க வேண்டும்
இதனிடையே பாதிப்புக் குள்ளான கன்னியாஸ்திரியை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ரனாகட் பள்ளிக்கு வந்தார் இந்திய கத்தோலிக்க பாதிரியார்கள் மன்றத்தின் தலைவர் பேசிலியோஸ் கர்தினால் கிளீமிஸ்.
அப்போது அவர் கூறும்போது, “இந்தச் சம்பவத்தில் நீதி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடரக் கூடாது. நடந்தது என்ன என்பதை நேரில் அறிவதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்” என்றார் கிளீமிஸ்.